பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமது நிலை, பின்தங்கிவிட்டது. இதற்குக் காரணம் நமது மரபுகளையும் மீறி, தலைவிதித் தத்துவம் நம்முடைய வாழ்க்கையில் ஊடுருவியது உம் "எல்லா முயற்சிகளும் கடவுள் மேற்றே; மனிதனால் ஆவது ஒன்றும் இல்லை" என்ற பொருந்தாக் கொள்கை வழிபட்டதனாலும்தான். அப்பரடிகள்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்; நடலையில்லோம்
ஏமாம்போம் பிணியிறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ரச்சே வடியினையே குறுகினோமே!

(நாலாந்திருமுறை 961)

என்று அருளியமையாலும் அறிந்துணர முடிகிறது. செழுந்தமிழ் வழக்காற்றில் முகிழ்த்த சமயம் மானுடத்தைப் போற்றுவது. மானுடத்திற்குக் கடவுள் துணை என்பதே கருத்து. கடவுள் துணை என்பதனாலேயே பயன்படுத்துவானைப் பொறுத்துத் துணை பயன்படும் என்பதைக்கூறி விளக்க வேண்டுமா?

ஆதலால், தொடர்ந்து நல்ல நூல்களைப் படியுங்கள்! படித்தார் வாய்க் கேளுங்கள்! பக்கலிலுள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகளுடன் தோழமை பூணுங்கள்! வாழ்க்கையை அறிவார்ந்த நிலையில் அணுகி வாழ்க்கைச் சிக்கல்களுக்கு அறிவார்ந்த நிலையில் தீர்வு காண முயலுங்கள்! நாட்டை வளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்! எந்தக் கடமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும அதனை உளமாரச் செய்யுங்கள்! நாட்டின் வரலாற்றை உய்த்துச் செலுத்தும் பேராற்றலாக நீங்கள் விளங்க வேண்டும். இதுவே நமது விருப்பம்; விழைவு; வேண்டுகோள்!