பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

377



48. [1]வாழும் நெறி

வாழும் நெறி! இப்படி ஒரு சிந்தனை! ஏன்? எதனால்? ஆம்: மனிதகுலம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கோடானுகோடி மக்கள் பிறந்து வளர்ந்து உண்டு, உறங்கி, இனம் பெருக்கி வேடிக்கை மனிதர்களாகவும் வெற்று மனிதர்களாகவும் செத்துப் போய் செத்துப் போய் சுடுகாட்டுச் சாம்பலாகிவிட்டனர். பிறந்தவர்களில் பலர் செத்துத்தான் போயினர். ஒரு சிலரே காலமாயினர்! ஆனால் இன்றோ பலரையும் காலமாயினர் என்று கூறுதல் மரபாகிவிட்டது! இது தவறு! வாழ்ந்தவர்கள் மட்டுமே காலமாக முடியும். ஆம்! வாழும் நெறி என்று ஒன்று இருக்கிறது! அதனால் மாணிக்கவாசகர். "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே !" என்று இரக்கப்படுகின்றார்! திருவள்ளுவர், "வாழ்வாங்கு வாழ்தல்!” என்று கூறினார். வாழ்வாங்கு வாழ்தலே வாழும் நெறி!

இந்த மானுடப் பிறவி தற்செயலாகவோ விபத்தின் காரணமாகவோ அமைந்ததல்ல. இஃது ஓர் அரிய வாய்ப்பு. ஒரே ஒரு தடவை மட்டுமே வழங்கப்பெறும் வாய்ப்பு. இந்தப் பிறவியை மதித்துப் போற்றிப் பயன்கொள்ளுதல் கடமை, பொறுப்பு. அதனால் எவ்ளவு நாள் வாழ்ந்தோம் என்பதல்ல; எப்படி வாழ்ந்தோம்? என்பதே கேள்வி! வாழ்ந்த காலம் எந்த முத்திரையைப் பெற்றது? வாழ்ந்த காலம் ஏதாவது அடையாளங்களைப் பெற்றதா? நம் பெயர் காலந்தோறும் பேசப்படுமா? சுடுகாட்டு எல்லையுடன் மடிந்து போதுமா? என்றெல்லாம் சிந்திப்பவர்கள் வாழும் நெறி பற்றிக் கவலைப்படுவார்கள்.

மானுடம் அற்புதமான பிறப்பு எண்ணி எண்ணி மகிழ வேண்டிய பிறப்பு. அறிவுக் கருவிகள், செயற் கருவிகள்


  1. தூத்துக்குடி வானொலிக்கு எழுதியது