பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளரும் நிலையில் முற்றிலும் விலங்கிலிருந்து வேறுபடுகிறான்; வேளாண்மைத் தொழில் வளர்கிறது. கற்காலம், உலோக காலம் என்று வெகுவேகமாக மனித உலகம் மாறி வளர்ந்து வந்திருக்கிறது. இன்று மனிதன் இயந்திர யுகத்தில் வாழ்கிறான். இதற்கு காரணம் அறிவு என்ற கருவிதான்! அறிவுதான் மனித உலகத்தை அழிவிலிருந்து மீட்டிருக்கிறது; மனிதனைத் துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றி இருக்கிறது.

"அறிவற்றம் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”

–குறள் 421

எனவே அறிவுடையராதலே வாழும் நெறி.

பல நூல்களைக் கற்கலாம். கருத்துக்களை அறியலாம்; உணரலாம். அந்தக் கருத்தை, கருத்தின் பொருளை நமக்கு உரிமையாக்கிப் கொள்ளும் பொழுதே அந்த நூல்களும், கருத்தும், கருத்து வழியிலான அறிவும் நமக்கு உரிமையாகும். வாழ்க்கையில் துறைதோறும் துணை செய்யும். உணவு வலிமையாகாது. உணவு செரிமானம் ஆகவேண்டும். செங்குருதியாக மாறவேண்டும். உடலுறுப்புக்கள் தோறும் அந்தச் செங்குருதி பாய்தல் வேண்டும். அப்போதே வலிமை கிடைக்கிறது. அதுபோலவே கற்ற கல்வியை, கருத்துக்களைச் சோதனை செய்தல் வேண்டும். அப்போதூன் கல்வி அறிவாக மாறும்.

அறிவைச் செயற்படுத்தி உறுதி செய்யும் பொழுது அல்லது நிருபணம் செய்யும் பொழுது அறிவியல் ஆகிறது. நன்றாக ஆழ்மனத்தில் சிந்தித்த சிந்தனை கருத்துருப் பெற்று பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி உறுதிப்படுத்தப் பெற்ற நிலையில் வாழ்க்கையில் நேரிடையாகப் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அறிவியலாக இடம் பெறுகிறது. அறிவியல் சாராத வாழ்க்கை மூட நம்பிக்கைகளாலும் தோல்வி மனப்பான்மைகளாலும் கெடும்; அழியும். அன்பைப் பற்றிப்