பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

381


படித்தல் கல்வி, அன்பு இன்னதென்று உணர்தல் அறிவு. அன்பை எப்படிக் காட்டவேண்டும் என்று ஆராய்ந்து அறிந்து அன்புக்கு இடையூறு ஏதும் வராமல் தொடர்ந்து அன்பு காட்டுவதும் வளர்த்துக் கொள்வதும் பாதுகாத்துக் கொள்வதும் அறிவியலாகும். இத்தகு அறிவியலைச் சார்ந்து வாழ்தலே வாழும் நெறி.

அறிவியல் ஓர் உண்மை. அது தானே இயங்காது. அதை இயக்க மனிதனின் மதிநுட்பமும் ஆற்றலும் தேவைப்படும். இந்த உலகத்தின் மாபெரும் இயக்க சக்தி ஆற்றல்தான். அந்த சக்தி – ஆற்றல் ஆள்வினையாக உழைப்பாக மாற்றம் பெறுகிறது. அறிவறிந்த ஆள்வினை என்பார் திருவள்ளுவர். மனிதத்தின் வெற்றி பொருந்திய பெரு வாழ்வு உடைமைகளால் அல்ல; விளம்பரங்களால் அல்ல. அறிவியல் சார்ந்த உழைப்பிலேயே இருக்கிறது.

“ஊழ்” – “தெய்வம்” என்றெல்லாம் சோம்பல் தனத்தை மூடி மறைப்பது மன்னிக்கமுடியாத குற்றம். “ஊழ்” என்று சொல்லி உறங்குபவர்கள். கூழுக்கு அலைவார்கள். ஏழரையாட்டைச் சனி என்பர். அவர்களால் ஏழேழ் பிறப்பும் தலையெடுக்க இயலாது. அறிவறிந்த ஆள்வினையுடன் சலனமின்றி, அவநம்பிக்கையின்றி, இடையீடின்றி உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும். நாளும் உழைப்பு, அறிவறிந்த ஆள்வினை வளர வேண்டும். நேற்று உழைத்தது போலவே நேற்று உழைத்த பாங்கிலேயே, உழைத்த போக்கிலேயே, உழைத்த அளவிலேயே உழைத்தல் கூடாது. அங்ஙனம் உழைத்தால் வளரும் உலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. அதுமட்டுமல்ல. நாள்தோறும் வளராத உழைப்பால், காலப்போக்கில் சோம்பல் நிறைந்த வாழ்க்கையாகிப் ”போதும் என்ற திருப்தி மனம்" வந்துவிடும். ஆதலால், உயிர்ப்புள்ள மனிதனின் வாழும் நெறி அறிவறிந்த ஆள்வினை இயற்றிப் பொருள் ஈட்டிப் புகழ்பட வாழ்தலேயாம்.