பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாம் திரும்ப வேண்டும்; திருந்த வேண்டும். திருந்துவதற்குரிய ஒரே வழி அறிவியலைக் கற்பது கூட அல்ல, நமக்கு அறிவியல் மனப்பான்மை – அறிவியல் அணுகுமுறை வேண்டும் முன்னுதாரணங்களைப் பார்த்து நடக்கும். மனப்பான்மை கூடாது.

மானுடப்பிறப்பு, ஆற்றல் வாய்ந்தது, அறிவியல் சார்ந்தது. அறிவியலால் ஆனது. அறிவியலால் மனிதனின் வாழ்க்கை வளர்ந்து வருகிறது. மாறி வருகிறது. மாற்றங்கள் மற்ற உயிரினங்களிடத்தில் இல்லை. ஏன்? அறிவியல் சார்பு இல்லாததே காரணம். வாழ்க்கை இன்று விரிந்தும் பரந்தும் ஆழ்ந்தும் கிடப்பது. அறிவியலாலேயாம்'.

அறிவியல் சார்ந்த மனித வாழ்ககை மூடத்தனத்தையும் கொடுமைகளையும் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இன்று வாழ்க்கை, அறிவியல் சார்ந்து இயங்குகிறது. அறிவியலில் காட்சி, சந்தேகம், ஆய்வு, உழைப்பு ஆகியன படிக்கற்கள்; ஆய்வுத் துறையில் எந்த ஒன்றையும் கூர்ந்து ஊடுருவிப் பார்க்க வேண்டும். பொருளை அறிந்தால் போதாது பொருளின் தன்மையை அறிய வேண்டும். காட்சி, அறிவியல் வளர்ச்சியின் முதல் நிலை, அக்காட்சியின்பால் நமக்குச் சந்தேகம் எழுதல் வேண்டும். சந்தேகப்படுதல் தவறன்று. சந்தேகத்தை ஆய்வு செய்யாமல் முடிவு செய்யக் கூடாது! சந்தேகம் ஆய்வு செய்யப் பெற்றுத் தீர்வு காணப்படுதல் வேண்டும்! அந்த முடிவுகளும் நிலையான முடிவுகள் அல்ல! செயற்பாட்டின் வழி துணியப் பெறுதல் வேண்டும்.

மனிதன் அவன் வாழ்க்கையில் முதலில் தொடர்பு கொண்டவை நிலம், நீர், தீ, வான், காற்று ஆகியவை. ஆயினும் அவனுக்கு நிலத்தொடு இருந்த தொடர்பே மிகுதி, அவனுக்கு முதல் அறிமுகம் பௌதீக விஞ்ஞானமே. ஐம்பூதங்களின் இயல் பற்றியதால் பௌதீக விஞ்ஞானம் என்று பெயர் பெற்றது. பெளதீகஇயல் உயிரியலாகச் சிறந்து