பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

389


போனாலும் இவற்றினால் ஏற்படும் அழிவுகளைத் தவிர்க்கலாம்! குறைக்கலாம்! இதற்குரிய அறிவியல் வளர்ந்திருக்கிறது; செயற்பாடு போதவில்லை.

மேலும், இன்று மனிதனின் சராசரி வாழ்க்கையின் ஆயுள் வளர்ந்திருக்கிறது. இது அறிவியல் படைப்புக்களால் உண்டான வளமும் வசதியும் நிறைந்த வாழ்க்கையினால் ஆயது. அது போலவே நோய்வாய்ப்பட்டாலும் இன்றைய மருத்துவ விஞ்ஞானம் உச்சாணிக் கொம்பு வரையில் வளர்ந்து கைகொடுக்கிறது. உடலுறுப்புக்களை இருதயம் உள்பட அறுவை சிகிச்சை முறைகளில் காப்பாற்றும் மருத்துவமுறை வளர்ந்திருக்கிறது. மனிதனுடைய உறுப்புக்கள் - இரத்தம் உள்பட கடைகளில் விற்கப்படும் காலமும் உருவாகலாம்!

அறிவியல் வளர்ச்சியால் மிகமிகச் சாதாரணமான பொருள்கள் கூட மதிப்புடையனவாகி விட்டன. வேப்பெண்ணெய் ஒரு காலத்தில் கிராமத்து மக்கள் தேய்த்துக் குளிப்பார்கள். இன்று, இந்த வேப்பெண்ணெய்யும் பிண்ணாக்கும் வேளாண்மைத் துறையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றிற்குப் பதிலாக இவை பயன்படுத்தப்படுகின்றன. “போடா! சுத்த விளக்கெண்ணெய்” என்று வழா வழா ஆட்களைத் திட்டுவது உண்டு! இந்த விளக்கெண்ணெய்யைத் தூய்மை செய்தால் நல்ல தரமுள்ள எண்ணெய் உற்பத்தி செய்யலாம். அந்த எண்ணெய்யிலிருந்து பல பொருள்கள் உற்பத்தி செய்யலாம். இங்ஙனம் வேளாண்மை அறிவியல் ஏற்படுத்தும் வளர்ச்சி, இந்த உலகத்தை நன்றாக அனுபவித்து வாழும் சொர்க்கமாக ஆக்கி வருகிறது.

அடுத்து, மனிதனின் தேவை எரிசக்தி. இந்த எரிசக்தி தொடக்கக் காலத்தில் சிக்கிமுக்கிக் கல்லில் தொடங்கியது. தற்செயலாக இரண்டு கற்கள், இரண்டு மரங்கள் உரசும்

கு.xiii.26.