பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

391


வெள்ளியில், செவ்வாயில் குடியேறி வாழும் காலமும் வரக்கூடும்.

நமது வாழ்க்கை அறிவியல் சார்ந்ததாக அமைய, நாளும் நாம் சிந்திக்க வேண்டும் பழக்கங்களைத் தவிர்த்துப் பழகும் முயற்சி தேவை. நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தோடு நாளும் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆய்வு மனப்பான்மையுடன் அணுக வேண்டும். நம்பிக்கை அடிப்படையில் அறிவியல் ஏற்றுக் கொள்ளாததை, ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த அடிப்படையில் கடவுளும் ஆய்வுப் பொருளே! கடவுளைப் பற்றிய விவாதம் இன்னமும் முடியவில்லை. விவாதங்கள் முடிவாகா. அறிவியல் முடிவு இரண்டாக இருக்காது; ஒன்றேயாம்!

50. அறிவியல் சார்ந்த
வாழ்க்கை

வாழ்க்கை வாழ்வதற்கே! இதில் என்ன ஐயம்! கொள்கையில் ஐயமில்லை! ஆனால், எத்தனைபேர் வாழ்கிறார்கள்? நமது நாட்டு மக்கள் தொகை 80 கோடி ஆனால் எத்தனை பேர் வாழகிறார்கள்! "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்று இரக்கப்பட்டாரே மாணிக்க வாசகர்! இந்த ரகத்தில் வாழ்வோர் எண்ணிக்கைதானே பல கோடி! சிலர் வாழக்கூடும்! வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு; இந்த உலகில் தோன்றியுள்ள உயிர்க்குலமனைத்தும் பிழைப்பு நடத்துகின்றன. யாதொரு குறையும் இன்றியே கூடப் பிழைப்பு நடத்துகின்றன. இனப்பெருக்கத்தில் கூடப் பிழைப்பு நடத்துபவர்கள் பின்தங்கி விடுவதில்லை. ஆம்! பிழைப்பு நடத்துபவர்களுக்குப் பசியும் காமமும் தானே இலட்சியங்கள்! இவை எப்படியும் கிடைத்துவிடும். ஆனால், வாழ்க்கை அமையுமா? அறிவார்ந்த வாழ்க்கை கிடைக்குமா?