பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புகழ்பட வாழும் வாழ்க்கை அமையுமா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? வாழ்க்கை வாராது வந்த ஒன்று. ஒரே ஒரு சந்தர்ப்பந்தான்! இதை வாழ்ந்து பயனடைய வேண்டாமா?

வாழ்க்கையின் மூல முற்பொருள் காலம். வாழ்க்கை வரையறுத்த காலவரம்பிற்குட்பட்டது. அந்தக் காலத்திலும் 22–வது வயது வரை குழந்தையென்றும், இளமை என்றும் பெற்றோர்களைச் சார்ந்து கழிந்து விடுகிறது. இது வளரும் காலம்! வாழும் காலமல்ல. முதிய நிலையில் 60 வயதுக்குப் பின் செயலற்ற நிலை! பயண ஆயத்தங்கள் செய்யும் காலம்! இந்தக் காலமும் சார்புகளுடன் சார்ந்து வாழும் காலமே! வாழும் காலமல்ல! 22 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டுள்ள 38 ஆண்டுகள் அல்லது 40 ஆண்டுகளே வாழுங் காலம். ஆதலால் அறிவார்ந்த வாழ்க்கையின் முதல் சிறப்பு காலம் போற்றல். காலத்தின் அருமைப்பாடு கருதி, காலம் முழுவதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் சலித்துக் கொண்டே இருப்பது; சென்று கொண்டே இருப்பது. காலம் நிற்காது. ஓட்டைகள் பல உள்ள கைகளிரண்டினால் தண்ணீரை அள்ளி ஓட்டைப் பானையில் ஊற்றித் தண்ணீரைச் சேமித்து வைத்துக் குடிக்க நினைத்தவன் கதைபோல ஆகிவிடும், காலத்தைப் போற்றாதவன் நிலை!

காலம் வாளா கழியும் வாயில்கள் பலப்பல. முதல் நிலை பேச்சு. தேவையில்லாமல் பேசக் கூடாது. எல்லாம் செயலாகவே அமைதல் வேண்டும். தூக்கம், சுகம் நாடல், பகை கொள்ளல் முதலியன காலச் சிதைவுக்குரிய வாயில்கள்! இவையெல்லாவற்றையும் விடப் பெரிய வாயில் “பொழுது போக்கு” “ஒய்வு” என்ற பெயரில் வீணாகப் போகும் காலம். ஒருவன் தன்னுடைய காலத்தைச் செலவழிக்கும் முறையிலேயே அவனுடைய வாழ்க்கை அமைகிறது. காலம் போற்றிப் பயன் கொள்ளும் வாழ்க்கை அறிவார்ந்த வாழ்க்கையாகும்.