பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடல் சுகம் காண்கின்றனர். உழைக்காமலே வாழ்க்கையை நடத்த நினைக்கின்றனர். உழைக்காமல் வாழ்தல் வாழ்க்கையல்ல. இது பிழைப்பு மட்டுமல்ல. பிறரை நம்பி வாழும் திருட்டுப் பிழைப்பு. இரந்து வாழ்தலை நிகர்த்த பிழைப்பு. சோம்பலுடனும் சோர்வுடனும் நூறு ஆண்கள் வாழ்தலில் யாருக்கு என்ன பயன்? இந்தப் பிழைப்பு வேண்டவே வேண்டாம்! ஒரு நாளேனும் பெருமுயற்சியுடன் வாழ்தல் வேண்டும். இதுவே அறிவார்ந்த வாழ்க்கை.

வாழ்க்கையை வாழ்வாக ஆக்க உடல்நலம் தேவை. உடல் நலம் இருவகையது. ஒன்று உள்ளக் கிளர்ச்சியுடன் செயல்படுவது. பிறிதொன்று உடலியக்கத்தில் யாதொரு குறையும் இன்றி, அனைத்தும் இயங்குவது. இவ்விரு நலன்களும் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாதன. முதல்வகை நம்முடைய வாழ்க்கையை, வாழ்க்கையின் நிகழ்வுகளை நாம் அணுகுவதை அல்லது எடுத்துக் கொள்வதைப் பொருத்தது. பெரும்பாலும் உளவியல் சார்புடையது. நாம் புகழ், செல்வம் இவற்றை அடைவது தவறல்ல. தவறல்லாதது மட்டுமல்ல. அடையவும் வேண்டும். ஆனால் இவைகள் மீது பற்று, ஆசையின் காரணமாக மனம் பாதித்து விடக் கூடாது. அதாவது, தண்ணீர் தளும்பலாம். தண்ணீர்ப் பானை ஆடக் கூடாது. எந்த ஆசையும் நெகிழ்ந்து கொடுக்காத ஆசையாக மாறிவிடின் அது உள்ளத்தைப் பாதித்து மூளையைப் பாதித்து வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறது. இன்றில்லையா, பரவாயில்லை. நாளை அடைவோம் என்ற எண்ணத்துடன் ஆறுதல் பெறும் தொடர்முயற்சியும் தேவை.

அடுத்து இன்றியமையாத் தேவைப்பட்டியலில் இருப்பது மனநலம். மனம் என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிர் அளவற்ற ஆற்றலுடையது; விரைந்து தொழிற்படும் தன்மையது; காற்றின் வேகத்தை நிகர்த்தது மனத்தின் வேகம், மனம் முறையாக பழக்கப்படுத்தப்பட்டால் வாழ்தலுக்குத் துணை செய்யும் ஒப்பற்ற கருவி. முறையாகப் பழக்கப்படுத்தாது போனால் மனம், மனிதனை ஆட்டிப் படைக்கும்.