பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

401



உழைப்பு, உயிர்ப்புள்ளதாக இருந்தால் இந்த உலகத்தில் எல்லாரும் இன்புறு நலன்களை அனைத்தும் பெறலாம்.

உழைப்பு, எந்தெந்தப் பொருள்களுடன் தொடர்பு கொண்டு வினை நிகழ்த்தினாலும் அந்தந்தப் பொருளின் மதிப்பும் பயன்பாட்டுத் திறமும் பயன்பட்ட உழைப்பின் அளவுக்கு ஏற்றவாறு கூடும். ஒரு இரும்புத் துண்டை ஒலி பெருக்கியாகச் செய்வதனாலும் அதே இரும்புத் துண்டை கடிகாரமாகச் செய்வதனாலும் முறையே பொருளின் மதிப்புக் கூடுவதன் உண்மையை ஓர்க.

உழைப்பினைக் காலம், இடம், பொருள் கருதி உறுதியுடன் உழைத்தால் ஆகாதது என்ன? உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்று அன்றும் கேட்கப்பட்டது; இன்றும் கேட்கப்படுகிறது.

நமது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் தப்பாமல் அள்ளிக் கொடுக்கும் நிலத்தொடும் நீரொடும் மற்றும் மரங்களுடனும் இசைந்து அவற்றை வளர்த்து அவற்றால் நமது வாழ்க்கையையும் நடத்தும் உழைப்பினை மேற்கொள்வோம்! அறிவறிந்த ஆள்வினை மேற்கொள்வோம்! உழைப்பே வரலாற்றின் உந்து சக்தி, உழைப்பே வளத்திற்குக் காரணம். நாம் வணங்கும் கடவுளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று தொழில் நிகழ்த்துவதை உன்னுக. நம்மைச் சுற்றியுள்ள இயற்கை ஓயாது உழைத்து மலர்களும் காய்களும் கனிகளும் தந்திடுவதைக் காண்போம். தவிடும் பிண்ணாக்கும் உண்ட மாடு பால் பொழிவதைக் காண்பீ! நோக்கும் திசைதோறும் உழைப்பு! உலகம் உழைப்பால் ஆயது. உழைப்பால் உலகம் ஆவது. ‘வினையே ஆடவர்க்குயிரே?’ என்ற நெறி போற்றுவோம்!

மனித குலத்தின் நாகரிகம் அறிவுப் புலனாகிய மூளைக்கும் உழைப்புக் கருவியாகிய கைகளுக்கும் உறவு