பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிடந்துழல்கிறது. ஆனால் கவிஞனின் கருத்து அதுவன்று. இந்த உலகம் துன்பமாக இருக்கிறது! இந்தத் துன்ப உலகத்தை - இனியனவாகக் காண்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்க! இனியனவாக்குக! என்பதுதான் கவிஞனின் கருத்து. கவிஞனின் ‘இனிய காண்க!’ என்ற சொற்றொடருக்கு இங்ஙனம் பொருள் கொள்வதே அறிவியல் சார்ந்த முறை.

அறிவு எது! அறிவு ஒரு சிறந்த கருவி! அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் வாழும் மாந்தர்க்கு அறிவு ஒரு சிறந்த கருவி. வாழ்க்கையை, வாழ்க்கையில் எழும் சிக்கல் களை எப்படி அணுகுகின்றோம் என்பதைப் பொருத்தே அறிவியல் சார்பு வாழ்க்கையில் வந்தமைகிறது.

நம்முடைய நாட்டில் இன்னமும் சமுதாயம் என்ற அமைப்பு தோன்றவில்லை! ஏன்? நமக்கு இன்னமும் இந்தச் சமுதாய அமைப்பில் தனி மனிதன் யார்? அவனுக்குரிய பொறுப்புக்கள், கடமைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பன பற்றிப் பலருக்குத் தெரியாது. சமுதாயம் என்ற அமைப்பு எப்படி உருக்கொள்கிறது? எந்தெந்த வாயிலாக உருப்பெறுகிறது? சமுதாயம் ஏன்? இதைப் பற்றியெல்லாம் பலருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளலாம் விரும்புவ தில்லை. சமுதாய அமைப்புக்குரிய வாயில்கள் எளிதாக இயற்கையாவே அமைந்துள்ளன. இயற்கையேயாயினும் மனிதனின் அகநிலை, புறநிலை வாழ்நிலைகள் மூலம்தான் சமுதாய அமைப்பு முழுமை பெறுகிறது. பயன் தருகிறது.

மனிதன் கூடிவாழப் பிறந்த சமுதாயப் பிராணி (Social Animal). கூடி வாழ்தல் என்ன அவ்வளவு எளிதா? கலித் தொகை கண்டுணர்த்திய பழகும் பாங்கியலை (Behaviourial Science) அறிந்து கொள்ள வேண்டாமா?

பலருடன் நட்புறவுடன் பழகுதல் என்பது ஒரு கலை. இந்தக் கலை கைவராமையினாலேயே பலருடைய வாழ்க்கைப் பயணத்தில் இடைமுறைவுகள் ஏற்பட்டுத் துன்