பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சமுதாயம் மிகவும் விரிந்தது; பரந்துபட்டது. சமுதாயத்தில் அனைவருடனும் நட்புணர்வுடன் பழகுதல் இயலாது. ஒரு சிலருடன்தான் பழக, இயலும். மற்றவர்களுடன் பகை கூடாது. பகை என்பது கூரையில் வைத்த நெருப்புப் போன்றது. சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் பகைகொள்வதால் சமுதாயம் முற்றாக அழிந்து போகும். யாரோடும் பகைமையைத் தவிர்த்திடும் அறிவு தேவை. நம்முடைய பகைவரித்திலும்கூட பகைமையைத் தவிர்த்திடும் அறிவு நமக்குத் தேவை. பொருளியலில் சார்ந்து வாழும் நட்பும். உறவும் வளரா. பயனும் தரா. அதே போழ்து, சார்ந்து வாழ்தலும் தவிர்க்க இயலாதது. பழகுபவர், ஏதாவது ஒரு வகையில் பழகுபவருக்குத் தவிர்க்க இயலாத நிலையினர் என்ற பாங்கில் வாழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனால் பரஸ்பரம் சார்பு அமையும். சார்பு தவறாகாது. பயனேயின்றிச் சுமையாக வாழ்தல் கூடாது. ஏதாவது ஒருவகையில் பயன்படக்கூடிய வாழ்க்கையை மேற்கொண்டால் பெறுவது தவறல்ல. இதற்கு நல்வாழ்க்கையில் பெறுதல் நிகழாது. எடுத்துக் கொள்ளுதலே நிகழும். இத்தகு ஒழுக்கம், உறவு வளரத் தேவை. அகநிலையிலும் புறநிலையிலும் நொய் அளவேனும் பிரிவு இன்றிச் செழித்த அன்போடு நினைந்து நினைந்து வாழ்தலே ஒழுக்கம் செறிந்த வாழ்க்கை.

பழகுதலுக்கு உரியவரை – உறவினைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. பலகாலும் அறிந்து ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்தபின் பிரிதல் கூடாது. “பேயோடு ஆயினும் பிரிவு தீயது” என்பது பழமொழி. நட்புக்கும் உறவுக்கும் மரபு வழிச் சார்புகள் பெரும்பாலும் துணை செய்வதில்லை. உணர்ச்சிப் போக்குகளும் துணை செய்வதில்லை. வாழக்கையின் குறிக்கோள்களே பெரிதும் நல்ல நட்புறவுக்குத் துணை.

குறிக்கோள் என்பது என்ன? குறிக்கோளைத் தேர்வு செய்வதில் அறிவியல் துணை செய்ய வேண்டும். வாழ்வியல்