பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சமுதாய அமைப்பைச் செழுமைப்படுத்தி வளப்படுத்தினால்தான் தனிமனிதன் வளர்வான். அறிகருவிகள் (பொறிகள்) செயற்கருவிகள் (புலன்கள்) ஆகியன புறச் சூழ்நிலைகளுடனும் சமுதாயத்துடனும் தொடர்பு கொண்டு அத்தாடர்புகளுக்குகேற்பத் தம்மை ஆக்கிக் கொள்கின்றன. வாழ்கின்றன. ஆதலால் தோற்றத்தில், தனி மனிதன் உண்டு. ஆயினும் அவன் ஒருவன் அல்லன். அவன் ஒரு கலவை மனிதன். கற்கும் நூல்களாலும் பழகும் நண்பர்களாலும் வாழும் சமுதாய நிகழ்வுகளாலும் மனிதன் உருவாக்கப்படுகிறான். ஆதலால் சமுதாய அமைப்பை, தனி மனிதனுக்கு ஆக்கந்தரத்தக்கதாக அமைக்க வேண்டும். சமுதாயம் அல்லது சமுதாயம் கண்ட அரசு, தனி மனிதனுக்குச் சலுகைகளை மருந்து போல் வழங்கலாம்; உணவு போல் வழங்கி விடக் கூடாது. வளர்ப்புகளிலும் நிதானம் நடுநிலை வேண்டும். அறிவும் திறமையும் பெறத்தக்கவாறு சமுதாய அமைப்பு அமைய வேண்டும். உழைப்பது, உண்பது என்பது உயர்நிலைப் பண்பு என்ற நெறியைச் சமுதாயம் வழங்க வேண்டும். நாட்டுப் பற்றும் மனித நேயமும் விருப்பங்களாக ஏற்றுக் கொள்ளப்பெற்ற சமுதாயம் தேவை. “ஒருவர் பலருக்காகவும் பலர் ஒருவருக்காகவும்" என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஒழுக்கமாக, சமுதாயத்தின் நடை முறையில் விளங்க வேண்டும்.

இன்று நம் மக்களிடையே அறிவியல் சார்ந்த சிந்தனை இல்லை; செயலும் இல்லை. பல நூறு ஆண்டுகளாகச் சாதிப் பிரிவினைத் தீமைகளிலும் மதச் சண்டைகளிலும் வறுமையிலும் கிடந்து உழன்ற வரலாறு மாற்றப்படவில்லை! இந்தத் துன்பந்தரும் சூழலிலிருந்து மீள அறிவியல், சமூக அறிவியல், அரசியல் அறிவியல், பொருளியல் அறிவியல் வழிகாட்ட வேண்டும். பொது மக்களும் ஏற்றுக் கொண்டொழுக வேண்டும் அந்த நன்னாள் வருக! வருக!