பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

411



52. எது வலிமை?

“வலிமையுடையனவெல்லாம் வாழும்” – என்பது உலகியல் நியதி. ஆம்: இயற்கையோடு, பொருந்தா உயிர்க் குலத்தோடு, ஒத்திசைந்து வாரா மனிதகுலத்தோடு போராடிப் போராடி வெற்றிகளைப் பெற்று வாழ்பவனே வலிமையுடைய மனிதன்! வலிமையுடையவன் அவன் வாழும் காலத்திலும் வாழ்கிறான்; அவன் மரணத்திற்குப் பின்னும் வரலாற்று ஏடுகளில் – மக்கள் நினைவில் வாழ்கிறான்! ஆம்! நிலையான வாழ்வுக்கு வலிமை வேண்டும்; வலிமையே வேண்டும்.

வலிமை – எது வலிமை? வலிமையை எப்படிப் பெறுவது? என்ற வினாக்களுக்கு விடை கண்டாக வேண்டும். வலிமைகள் பற்றி விரித்துப் பலவாகக் கூறலாம். அப்படிக் கூறினால் தவறில்லை. ஆயினும் நாம் சில தலைமைத் தகுதியுடைய வலிமைகளை எடுத்துக் கொள்வோம்! இவற்றுள் முதலிடம் பெறுவது உடல்வலிமை “உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே!” என்றார் திருமூலர். உடம்பை வளர்த்தல் என்றால் என்ன? உடம்பின் வலிமையை உடம்பின் பயன்படுமாற்றலை வளர்த்துக் கொள்ளுதல் என்பது கருத்து. ஆம், உடல் நோயில்லா உடம்பாக – எந்தச் சூழ்நிலையிலும் பயன்படத்தக்க சுறுசுறுப்பும் ஆளுமையும் மிக்க உடம்பாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். “கருவிகள் அனைத்தும் காரியப்பாட்டுக்கே!” என்றொரு முதுமொழி உண்டு. கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தப்படாத கருவிகள் துருப்பிடித்தும், மட்கியும் அழியும். அது போலவே தான். உழைப்பில் ஈடுபடுத்தப்படாத உடல்திறன் அழியும்; நோய்வாய்ப்படும். உடல் உழைப்பால் வளர்வது; வாழ்வது; ஆதலால், உடலை – உடலின் பல்வேறு பொறிகளையும் புலன்களையும் இயக்குவதன் மூலம் பயன்கொள்ள