பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். அவ்வழி, உடலை வலிமையுடையதாக வைத்திருக்க முடியும்.

அடுத்த வலிமை அறிவு வலிமை. உடலமைவின் பொறிகளுள் ஒன்றாகிய மூளையின் பாற்பட்டது அறிவு வலிமை. ஆயினும், அறிவைத் தனிநிலையில் வைத்தெண்ணுவது மரபு. மரபு மட்டுமன்று. அவசியமும் கூட! ஏன்? உடல்வலிமைக்கும் கூட அறிவு வலிமை துணையாய் அமைவது. எவ்வெவற்றை உண்பது? எப்படி வாழ்வது? என்றெல்லாம் அறிவுறுத்துவது அறிவுதானே! அறிவு ஒரு சிறந்த கருவி! வலிமை சான்ற கருவி. அறிவைக் கல்வியால் பெறலாம். ஆனால் கல்வியே அறிவு அல்ல. அறிவு நுட்பமானது; நன்மையே செய்வது; வெற்றியே பெறுவது. அறிவில் நல்லது – கெட்டது இல்லை! அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. ஆனால், அறியாமையே பல சமயங்களில் அறிவு என்று நம்பப்படுகிறது. இது தவறு. அறிவு, வேற்றுமைகளைக் கடந்தது. மனித உலகத்தை அணைப்பது; வாழ்விப்பது. இத்தகு அறிவே அறிவு; வலிமையுடைய அறிவு. அறிவு துணிவினைச் சார்ந்தது; சலனமற்றது. இத்தகு அறிவுடையார் எல்லாம் உடையார் என்பது திருக்குறள் கூறும் உண்மை.

அடுத்தது ஆன்ம வலிமை: ஆம்! எல்லாக் கருவிகளையும் வலிமைகளையும் ஆளும் உரிமையும் பொறுப்பும் உடைய ஆன்மா – உயிர் வலிமை உடையதாக இருக்க வேண்டும். ஆன்மா, செத்துச் செத்துப் பிழைத்தால் எங்ஙனம் வலிமை பெறும்? வலிமைசான்ற கருவிகளைக் கையாளும் துன்பம் – தொல்லைகளால் கவலை வாய்ப்பட்டு, கவலையால் அரித்து அழிக்கப்படும் ஆன்மா வாழ்ந்து என்ன? செத்தால் என்ன? அச்சத்தினின்றும் அகன்று – பயத்தைக் கொண்டு போய்த் துரத் தள்ளித் துள்ளியெழும் ஆன்மாவே வலிமை உடையது. இடறினும், இடறி வீழ்ந்திடினும், வீழ்ந்து தளர்ந்தே போயினும் நோய்கள் பல தொடரினும் அஞ்சாது – அடிபடும் பந்தைப் போல