பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

27



விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதில்லை. ‘லாட்ஜ்’ களுக்குப் போய் விடுகின்றனர். உற்றார்-உறவினர் ‘ஒப்பு’க்குரியவராகி விட்டனர். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பழகுகின்றனர். ஆதலால், அரசும் செயற்கை முறையில் சோஷலிசம் படைக்க முயலுகிறது. அதற்கு மாறாகப் பழந்தமிழக வாழ்க்கை முறை-சேக்கிழார் காட்டியநெறி வாழ்க்கையாக மலருமானால் இயற்கையில் சோஷலிசம் மலரும்.


4. [1]நாட்டுப்பற்று

மானிட வாழ்க்கை நிலத்தை மையமாகக்கொண்டு நிகழ்கிறது. ஆதலால் நாடின்றி வாழ்க்கை இல்லை. ஆதலால் பழங்காலத்திலிருந்தே நாட்டுப்பற்று எல்லாத் துறையினரிடத்தும் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது, பெரிய புராணத்தில் வரும் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர். சேக்கிழாரும் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர். ஆதலால் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றில் தொண்டைநாட்டின் சிறப்பைப் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். தமிழ்க் காப்பிய மரபில் "நாட்டுப்படலம்" செய்த பிறகுதான் காப்பியம் தொடங்கும். ஆதலால் பழைய இலக்கியங்கள் அனைத்திலும் நாடு சிறப்பித்துப் பேசப்படுகிறது.

நாடு, வாழ்க்கைக்குத் துணையாய், களமாய் அமைந்து வரலாற்றை நடத்தி வைக்கிறது. நாடு வாழும் மக்களால் பெருமையடைகிறது. பொருள் தன்மை அடைகிறது. “நாடு நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? நல்ல ஆடவர்கள் வாழ்ந்தால் போதும்! அவர்கள் நாட்டைக்


  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை