பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறுகிறார். ஆற்றலைத் தந்து வாழ்வளிக்கும் காதலியின் கடைக்கண் பார்வை. தலைவனுக்கு ஒப்பற்ற ஆற்றலை வழங்குவதாக பாரதி கூறுவான். நட்பு பற்றிச் சொல்லவே வேண்டாம்! பழகிய நட்பினால் அமையும் தோழர் வாய்ப்பின் வரலாறு படைக்கலாம். ஆன்மா நாடி அணையும் பிறிதொரு துணை – தணித்துணை ஒன்று உண்டு. அது எது? ஆம்! தனித்துணை – வழித்துணை அது! நரகொடு சொர்க்கம் புகினும் பிரியாத் துணை! அத்துனைதான் கடவுள்! கடவுள் வாழ்த்துப் பொருள் அல்ல! வாழ்வுப் பொருள். அவன் துணை வலிமை சார்ந்தது! கூற்றுவனையும் எதிர் கொள்ளும் வலிமை தரவல்லது கடவுள் துணை!

இத்துணை வலிமைகள் அமைந்தாலும் வலிமை பயன்பட வேண்டாமா? வலிமை வளர வேண்டாமா? வலிமை எதற்கு? கடவுள் துணை என்று சொர்க்கத்தை நிரப்பவா? தோழர்களும்தான் எதற்கு? களித்துப் பேசி மகிழவா தோழர்கள் ! காதலியுந்தான் எதற்கு? உடற்பசிக்கும் உறவுக்கும் பிள்ளை பெறவும்தானா? அறிவு வலியும்தான் எதற்கு! விவாதங்கள் நிகழ்த்தவா? இல்லை வாழ்வது எதற்கு? பிழைப்பு நடத்துவது வாழ்வா. என்ன? சீ.சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றான் பாரதி. வாழ்தல் எதற்கு? வாழ்க்கை குறிக்கோளுடையதாக அமைய வேண்டும். வாழ்க்கைக்குக் குறிக்கோள் தேவை! குறிக்கோள் என்பது என்ன? இந்த உலகத்தில் பிழைத்து விடுவதல்ல. வாழ்க்கையின் உழைப்புத் திறன் மேலும் மேலும் வளர வேண்டும். வையகம் வாழ வாழும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்; உழைப்பும் வேண்டும். இந்தியாவில் இத்தகு குறிக்கோளுடையவர்கள் சென்ற காலத்தில் பலர் வாழ்ந்தனர். இந்த நூற்றாண்டில் உண்டியே, உடையே, பாலுறவே என உகந்து வாழும் வெற்றர்கள் மிகுதி. ஓர் இளைஞன் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெறுகிறான்! அவன் மேலும் படிக்க விரும்பவில்லை! தேர்ந்த தொழில் செய்யும் முனைப்பில்லை! எங்காவது ஒரு துப்பரவுத் தொழிலாளி