பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாயம்

445


பணி கிடைத்தால் கூடப் பல்லிளிக்கிறான்! துப்பரவுத் தொழில் கீழான தொழிலல்ல! ‘சந்தி பெருக்கும் நல்ல சாத்திரம் கற்போம்’ என்பான் பாரதி! ஆயினும் இவனுடைய வயதுக்கும் கல்விக்கும் உரியதொழில் அல்ல. துப்புரவுத் தொழிலைச் செய்யவும் விருப்பம் இல்லை! ஆள்பிடிக்கிறான்! பார்ப்பதோ ஏவலர் வேலை! ஆனால், ஏவலர்க்குரிய பணிசெய்ய விரும்புவதில்லை! எல்லாம் பணம் படுத்தும் பாடு! எந்தப் பணியிடத்திலும் எந்தப் பணியிலும் முறையாக ஈடுபட்டு உழைத்தால் அங்கெல்லாம் கைநிறைய ஊதியம் வாங்கமுடியாதா? பிற்காலச் சேமவைப்பு ஏற்பாடு செய்ய இயலாதா? புதியதொரு தடம் அமைக்கும் உழைப்பைத் தர விருப்பம் இல்லை! முனைப்பில்லை! முழுச் சோம்பல் ஆட்டிப் படைக்கிறது: இந்தச் சூழ்நிலையில் பத்திரமான, பாதுகாப்பான, தப்பாமல் பணம் கிடைக்கக் கூடிய பணியை நாடுகின்றனர்; ஏன் இந்த அவலம்? வாழ்க்கையில் குறிக்கோள் இல்லை!

இளைஞர்களுக்கு இந்த நூற்றாண்டின் குறிக்கோள் எதுவாக அமைய வேண்டும்? அனைவரும் கூடி வாழ்வது இந்த நாட்டில்! நாடு வளம் கொழித்தால்தான் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வளம் காண இயலும்! நம்மைக் காப்பாற்றி வாழ்வளிக்கும் இயற்கையைக் காப்பாற்றுங்கள்! மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்! மண்ணுக்கு உரமிடுங்கள்! மண்ணில் வளரும் மரங்களை இயற்கைத் தாவரங்களைக் காப்பாற்றுங்கள்! உயிர்க் குலத்தை நேசி யுங்கள்! மானுடத்தை மதித்திடுமின்! வளர்வீர்! வளமையொடு வளர்வீர்! வாழ்வித்து வளர்வீர்!

53. [1]சமுதாயம் செழிக்க

கழனியில் பயிர் செழிக்கக் களை தடை, ஒளி விளக்கின் ஒளிக்குத் தடை புகைக் கரடு, தூய இன்பக்


  1. வானொலியில்...