பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

419


வறிதல்” என்று எடுத்துக் காட்டிற்று. எங்கே அந்த வள்ளுவத்தின் வாழ்க்கை? மனிதனிடத்தில் அடர்ந்து வளர்ந்துள்ள இந்த தன்னலக்காடு அழிக்கப் பெறுதல் வேண்டும். ஆங்கு “நாம்” ‘நமது’ என்ற பொதுமை நலமிக்க குளிர் நிழல் தரு மரங்கள் வளர்க்கப் பெறுதல் வேண்டும். தன்னலக் காடாகிய கேட்டினைக் களைவோம். சமுதாயம் செழித்து வளரும்.

உலகத்தில் உறவு வளர்வதற்குரிய இன, துணைச் சார்புகளே அதிகம். ஆனால், மனிதன் உறவை வளர்க்க விரும்புகின்றானில்லை. இனம் மறந்து வெறுப்பை வளர்த்துக் கொள்கின்றான். அவ்வழி பகை வளர்க்கிறான். போர்க் களங்கள் காண்கிறான்; ஆள்வினைக்கும், அனைத்தற்கும் தந்த கரங்களை, அடித்தற்குப் பயன்படுத்துகின்றான். கற்காலத்திலிருந்தே மனிதன் இந்த வகையில் கொலைக் கருவிகளின் ஆற்றலைப் பெருக்கியே வளர்த்து வளர்ந்திருக்கின்றான்.

கல்லெறியும் தூரத்திலிருந்த ஆற்றல் கலணாகத் தாண்டி வளர்ந்து, வில் அம்பாக வளர்ந்து, துப்பாக்கியாக வளர்ந்து இன்று இறுதியாக ஏவுகணையில் வந்து நிற்கிறது. அவன் அன்பின் ஆற்றலைப் பெருக்கி வளர்த்தானில்லை. அழிக்கும் கருவிகளின் ஆற்றலைத்தான் பெருக்கி வளர்த்திருக்கிறான். அதனால் எங்கும் அமைதியின்மை! இனிமையான உறக்கம்; இந்த உலகத்தில் யாருக்குத்தான் உண்டு!

ஊர்களை இணைக்கவும் அண்டங்களை இணைக்கவும் மண்ணில் சாலைகளைக் கண்டான். விண் வழிப் பயணப் பாதைகளைக் கண்டான். அலைகடலில் வழிகள் வகுத்தான். புறத்தால் இந்த வழிகள் நிலவுலகை இணைத்திருப்பது உண்மை. ஆனால் மனித உள்ளங்களை இணைக்க உயர் சான்றோர் கண்ட நெறிகள் மனிதர்களின் நெஞ்சங்களை இணைப்பதில் இன்னமும் வெற்றிபெறவில்லை. மனித உலகத்தின் ஈடேற்றத்திற்கென்றே கொடுந்துன்பங்களை