பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உலகு முதலில் நெருப்பு, காற்று, நீர், கல், மண் உயிர்கள் ஆய முறையே தோன்றி வளர்ந்தது. இவ்வளர்ச்சி முறையில் கல் தோன்றி மண் தோன்றுவதற்கு முன்னே தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி என்று தமிழின் புறத்துறை இலக்கண நூல் – புறப்பொருள் வெண்பா மாலை – பேசுகிறது. இத் தமிழினம் வாழ்ந்த எல்லை விரிந்தும் பரந்தும் கிடந்தது. ஒரு காலத்துத் தமிழகத்து வட எல்லை இமயப் பனிமலை, தெற்கே குமரித் துறை, கிழக்கும் மேற்கும் கடல், என்று,

“தென்குமரி வடபெருங்கல் குண,
குட கடலாவெல்லை”

ஒரு புலவர் பேசுகிறார். இப்புலவர் காலத்திற்குமுன் இன்றைய குமரித்துறைக்கு அப்பாலும் விரிந்த தமிழ் நிலம் இருந்ததாகச் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். அப் பகுதிகளை எல்லாம் கடல்கொண்ட கண்டம் – லெமூரியா – என்று சரித்திரம் குறிப்பிடுகிறது. கடல்கொண்ட தமிழ் நிலத்தில் சரித்திரத்தை நுழைந்து ஆராய்ந்து பார்த்தால் கி.மு. 30,000க்கும் அப்பாற்பட்ட பழமைக்குச் செல்லுகிறது. தமிழர் வாழ்வுத் தொடக்கத்தின் தொன்மை. இக்கடல் கொண்ட, தமிழ் நிலத்திலே தமிழும் தமிழ் வளர்த்த சங்கங்களும் தமிழரசர் ஆட்சி முறையும் தமிழ்ச் சமயமாம் சைவ நெறியும் வளர்ந்திருந்தது என்று சரித்திரம் பேசுகிறது. இந்த நாகரிகத்தின் தொடர்ச்சியே சிந்துவெளி நாகரிகம். சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி சர்ஜான் மார்ஷல் துரை மகனார் எழுதும் பொழுது அந்த நாகரிகத்தை ஒரு முழு நிலை அடைந்த தனித் திராவிட நாகரிகம் என்று குறிப்பிடுகின்றார். தமிழரைத் திராவிடரென்றும், தமிழ் நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்றும் குறிப்பிடுகின்ற வழக்காறு மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்தது ஆகும். எனவே, திராவிடர் நாகரிகம் என்று வருவது தமிழ் நாகரிகமே ஆகும்.