பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

423



தமிழ்மொழி

மனித சமுதாயம் கை அசைத்து – சைகை காட்டி – வாழ்ந்த காலத்தில் பைய நாவசைத்தாள் தமிழன்னை என்று கரந்தைக் கவியரசர் கூறுகிறார். மொழி நூல் வரலாற்று முறைப் படிக்கும் தமிழ் மொழி மிகத் தொன்மையான மொழியாகும். இத் தமிழ்மொழியே தென்னாட்டு மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. இந்திய நாட்டின் மொழிகள் பலவற்றிற்கும்கூட தமிழே மூலமாகும். தமிழ் மொழி காலத்தால் மூத்த மொழி, முதுமொழி, இனிமைப் பண்பு மிக்க மொழி, நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்து நிற்கும் நிறையுடைய மொழி வழிகாட்டும் திருமறைகளும், வாழ்வு விளக்கும் இலக்கியங்களும் அளவிலா இன்பந்தரும் பல கலைகளும் பெற்றுப் பொலிவுடன் நின்றுலவும் ஒப்பற்ற ஒரு மொழி, அதுவே தமிழ் மொழி, நமது தாய்மொழியும் ஆகும்.

மொழிவழி நாகரிகம்

ஒரு மொழியும் அம் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்களும் வெறும் மொழி இலக்கியம் என்ற அளவோடு அமைந்து விடுவதில்லை. அம்மொழி பேசும் மக்களை நயத்தக்க நாகரிக வாழ்வுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாகும். மேலும், பண்பட்ட வாழ்க்கையை விளக்கும் கருவியும் ஆகும். மக்கள் நாகரிகத்தைத் தெரிந்துகொள்ளச் சாதனமாக அமைந்துள்ளது, மொழியும் அம்மொழியின் இலக்கியங்களுமேயாகும். தமிழ் மொழியும் அத்தகு பேரிலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டிருந்தது. அவைகளுள் பலவற்றைக் கடல் கொண்டுவிட்டது. எஞ்சி நிற்பவை சங்க இலக்கியங்கள் என நாம் கொண்டாடும் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும், பதினெண்கீழ்க் கணக்கு முதலிய இலக்கியங்களும், தொல்காப்பியம் என்ற இலக்கண நூலுமே ஆகும். தொல்காப்பயித்திற்கும் முந்திய