பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறை சொல்லமாட்டார்கள்; நாட்டுக்கு வளம் சேர்ப்பார்கள் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.


                    "நாடா கொன்றோ
                                    காடா கொன்றோ
                    அவலா கொன்றோ
                                    மிசையா கொன்றோ
                    எவ்வழி நல்லவர் ஆடவர்
                                    அவ்வழி நல்லை வாழிய நிலனே!
(புறம்-187)

என்பது புறநானூறு.

நாட்டுப் பற்று ஒவ்வொருவருக்கும் தேவை. நாட்டுப் பற்று என்பதன் பொருள் "வாழ்க பாரதம்" "வாழ்க செந்தமிழ் நாடு” என்று வாயினால் முழக்கம் செய்வதன்று. மழை பெய்யாது, இடி இடித்துப் பயன் என்ன? தன் வாழ்க்கையில் தொடர்புடையதாய் அமைவது வாழ்வளிக்கும் நாடு, எதையும்விட நாடு உயர்ந்தது; எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்ற அசைக்க முடியாத நம்பிக்கைவேண்டும். நாள்தோறும் இனிய நல்லுழைப்பால் நாட்டை வளர்ப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். நாடு உணவளித்து வாழ்வளிக்கிறது. ஒருவன் தான் உண்ணும் உணவுக்கும் அதற்கு மேலும் நாட்டை வளப்படுத்தவேண்டும். நாட்டின் அனைத்துத் துறை வளங்களையும் பாதுகாக்கவேண்டும்.

நாடு என்றால் வரலாறு உண்டு. ஒரு நாட்டின் மக்கள் அந்த நாட்டின் வரலாற்றுக்குப் பாத்திரங்களாகவும் விளங்குகிறார்கள்; வரலாற்றைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த இருவகைப் பணிகளையும் செய்வது குடிமக்களின் நீங்காக் கடமையாகும். நாட்டின் வளங்களைப் பாதுகாப்பது சமுதாய வாழ்க்கைக்கு உறுதியளிக்கக் கூடியது. நாட்டின் பல்வகை வளங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் நாட்டில்