பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

427


வடிவு, வரி வடிவு, வண்ணமும் உறுப்புக்களும் பொருந்திய முழு உருவத் தோற்ற வடிவம் முதலியவற்றிற்குக் கொண்டு வருகின்றனர். இது அகத்தில் எழுந்த உணர்ச்சிகளை நிலை நிறுத்தி – நல்லின்பம் தொடர்ந்து அனுபவிப்பதற்காகப் புறுத்தே ஆக்கிக் கொண்ட முறை. இம்முறை அமையாதாயின் பொறிகள் உலகியலின் ஆழ்ந்த காலப்போக்கில் அகத்தில் இருந்த நல்லுணர்ச்சியையும் கெடுத்துவிடும். இம்முறையைக் கையாளுபவர்கள் தவம் நிறைந்த ஞானிகளும், அருட்கவிஞர்களும் ஆவர். இத்தகு முறையை அவர்கள் கையாண்டமையினால் அவர்கள் பெரும்பயன் அடைந்ததோடன்றிப் பின்னர் தம்வழி வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் ஒரு பேருதவியைச் செய்தவர்களானார்கள். உலகில் மிகச் சிலரே அகத்தில் வளர்த்துப் புறத்தேயும் படைக்கும் திறம் படைத்து நல்லருள் நிலை எய்துகிறவர்கள். பெரும்பான்மையோர் புறச் சாதனங்களினின்று அகத்தை வளர்ப்பவர்கள். ஆனால் அகமின்றிப் புறம் உருவாக முடியாது. சாலை போடுபவரின்றிச் சாலையும் இல்லை, சாலையின் மீது வழி நடப்போரும் இல்லை. ஒரு சிலர் சாலை அமைந்த பிறகு பல்லாயிரம் பேர் அச்சாலை வழி நடந்து ஊர் சென்றடைதல் இயல்பு. அதுபோலத் தவம் நிறைந்த தமிழ்ச் செல்வர்கள் சிலரால் இருளகற்றித் துன்பத்தின் தொடர்வறுத்து இன்பம் பெருக்கிப் பிறவா நெறி அளிக்கும் செம்பொருளினை நினைந்து நினைந்து வாழ்ந்தனர். அச்செம்பொருள் இப்படியன், இந்நிறத்தன, இவ் வண்ணத்தன் என்று எழுதிக் காட்ட முடியாததாக இருந்தாலும், தாம் அனுபவிப்பதற்காக நீக்கமற எங்கும் நிறைந்த அந்தப் பரிபூரணனுக்கு உள்ளக்கிழியில் உரு எழுதினர். எழுதத் துணை நின்றது அனுபவ வாழ்வு. அருளனுபவத்தின் திட்பமும் திறமையும் அதைச் சாதித்தது. உள்ளக் கிழியில் எழுதிய திருவுருவம் "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிண் சிரிப்பும்–", என்று அமுதத்