பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழில் ஒலி வரி வடிவுகளாய் வெளிப் போந்தது. இவ்வரி வடிவு அருளோடு கலையும் கொண்டு விளங்கிக் கலைஞர் கைத் திறனால் கண்கள் கண்டு களிக்கவும், தீண்டி இன்பம் நுகர்தற்குரிய முறைகளும் திருவுருவ வடிவமாக மலர்ந்தது. இதுவே திருவுருவ வழிபாட்டு முறையில் அமைந்து கிடக்கும் கொள்கையும் படிமுறை வளர்ச்சியும் ஆகும். இங்ங்ணம் நமது வழிபாட்டு முறை வளர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது சமயத் துறையில் இலிங்க வழிபாடு. பசுபதியாகிய சிவ வழிபாடு, அன்னை வழிபாடு ஆகியவை பதினாயிரக்கணக்கான ஆண்டுப் பழமையும் உலகெங்கும் பரந்த பெருமை உடையனயாகும்.

தமிழர் சமயமும் சமுதாயமும்

தமிழர் சமய நெறி சமுதாயத்தோடு பின்னிக் கிடந்தது. இத்தகு மாட்சிமை மிக்க வாழ்வு சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழர்களிடையே பொருந்தியிருந்தது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதின் வழிமொழியே "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமூலர் வாக்கு. பின்னர் பிறமொழிச் சார்பினருடைய நுழைவோடு பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பேதமையும் நிறைந்தது. சாதி குலக்கோத்திரச் சண்டைகள் பெருகத் தலைப்பட்டன. இதனால் சமய வாழ்வில் குழப்பமும், சமுதாய வாழ்வில் வேற்றுமைகளும் வேறுபாடுகளும் இடம்பெற்றன. இந்த நிலையைக் கண்டு ஆற்றொணாத் துயரமுற்று இரங்கிய தமிழினத்தின் தவத்தால் தமிழ் மறை தந்த நால்வர் பெருமக்கள் தமிழகத்தில் தோன்றினர். அவர்கள் ஒரு மகத்தான தமிழர் சமய மறுமலர்ச்சி இயக்கத்தைத் தொடங்கித் திறம்பட நடத்தி மாநில இயக்கமாக்கினர். தமிழர் சமயத்தைச் சிதைக்க முற்பட்ட பிறமொழி நுழைவு பிறப்பால் வேற்றுமைகள் ஆகிய இரண்டையும் களைய முயற்சித்தனர். அப்பேரியக்கத்தின் வழிநின்று வாழ்வதே