பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

431


பல நல்ல ஊழியங்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். அதுபோலவே இந்நாட்டில் வாழும் தமிழ்ப் பெருமக்களும் ஒருமுகமாக நல்ல திட்டத்தோடு செயலில் ஈடுபட்டுச் செந்தமிழையும் சிவ நெறியையும் பேணி வளர்க்க வேண்டியது கடமை, தலையாய கடமையுமாகும்.

55. [1]இளைஞர்களே வேலை இல்லை என்று சொல்லாதீர்கள்!

இந்திய வரலாற்றில் விவேகானந்தர் ஒரு மைல் கல். மைல் கல் மட்டுமல்ல. ஒரு திருப்பு மையமும் கூட.

இந்து மதம் என்பது சும்மா இருப்பது; வினைகளை அனுபவிப்பது; அழுது தீர்ப்பது என்றிருந்த காலத்தில் – "இல்லை, இல்லை! இந்து மதம் அழுது தீர்ப்பதல்ல!" என்று இடித்துக் கூறிச் செயல் தடத்தில் திருப்பிய பெருமை விவேகானந்தருக்கு உண்டு!

விவேகானந்தருக்கு மட்டுமே உண்டு!

"பஞ்சம் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரை ஒரு தீராத வியாதியாகவே ஆகிவிட்டது. தற்போது இதுபோல வெளிநாடுகளில் எங்காவது இருக்கிறதா? இல்லை! ஏன்? ஏனெனில் அங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள். இங்கோ உயிரற்ற நடைப்பிணங்கள்தான் வாழ்கின்றன" என்பது விவேகானந்தரின் அருள்வாக்கு.

நாட்டின் இந்த நிலையையும் எண்ணி, விவேகானந்தரின் வாக்கையும் படித்தால் என்ன உணர்வு வரும்?

வறுமைய – ஏழ்மையை எதிர்த்துப் போராடும் குணம் வராதா?


  1. குமுதம் 16.1.1992