பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

434

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்ச்சி வேண்டுமானால் மாற்றம் தேவை என்று உணர்த்திய மேதை மார்க்ஸ்.

இத்தகு சிந்தனை நெருப்பு தமிழகத்திலும் எழுந்தது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன். அந்த நெருப்பின் பொறி தெறித்தது! ஆனால் அந்தப் புரட்சிக்கனலை அவித்து விட்டனர்.

“இன்னா தம்ம இவ் வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தேரே!”

என்பது அந்தத் தீப்பொறி! “இனிய காண்க!” என்று கூறியது. இன்னாதனவாகவுள்ள உலகத்தை இனியனவாக அமையும்படி மாற்றுக! மாற்றி வளர்த்திடுக என்பதற்கே! அதுவே கவிஞனின் ஆணை! ஆனால் மரத்துப் போனது நமது மூளை! இன்னாதனவாக உள்ள உலகத்தை மாற்றாமல், வளர்க்காமல் இன்னாதனவற்றையே இனியனவாகக் காண்க என்றனர். ஆன்ம திருப்தியைப் பெறுக என்றனர். ஆன்ம திருப்தியைப் பெறுக என்று கூறியதோடு நிற்கவில்லை. ஆன்ம முயற்சிகளுக்கும் ஊழின் பெயரால் தடை விதித்து விட்டனர். நமது இடைக்காலச் சிந்தனை, கல்வி, வாழ்க்கை முறை அனைத்தும் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வும் அறிவறிந்த ஆள்வினையுமின்றித் தலைவிதியையே சுற்றிச் சுற்றி வந்துள்ளன. விழிப்புணர்வே இல்லை! சிலர் இத்தகைய மூட வாழ்க்கைக்குச் சமயங்களே காரணம் என்று கூறுவர். இது தவறு. உயர்ந்த சமயச் சிந்தனையாளரான திருஞான சம்பந்தர்.

அவ்வினைக்கு இவ்வினையும் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே”

என்று முயற்சிக்கு மாறுபட்ட வினை நம்பிக்கையைச் சாடுகின்றார்! அருணகிரிநாதர். “நாள் என்செயும், வினைதான் என்செயும்?” என்று வினாக்கள் எழுப்பி நமக்குத் தெளிவூட்ட