பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

435


முயற்சி செய்துள்ளார். ஆனால், மூடநம்பிக்கையே வெற்றி பெற்றது. அறிவு வெற்றி பெறவில்லை! மார்க்ஸ். எங்கோ எதிர்வரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உலகத்தைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

இனிய அன்புடையீர்! உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று பேசுவதை ஆமோதிக்காதீர்கள்! இப்படித்தான் இருக்கும் என்று கூறினாலும் ஏற்காதீர்கள்: உலகியல்புகளை மாற்றுவதே, வளர்ப்பதே வாழ்க்கையின் குறிக்கோள்! நமக்குத்தேவை மாற்றங்களும், மாற்றங்கள் வழிப்பட்ட வளர்ச்சியுமேயாகும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும் என்று அங்கலாய்த்துக் கொண்டு முணுமுணுப்பதில் பயனில்லை. இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கவும். சிந்தித்து எடுத்த முடிவுப்படி இந்த உலகத்தை மாற்றவும் நமக்கு உரிமை உண்டு. உரிமை உண்டு என்பது மட்டுமன்று. அதுவே நமது கடமையும் ஆகும் என்பது கார்ல் மார்க்சின் கொள்கை.

சென்ற கால வரலாற்றுக்குள் ஓடி ஒளிந்து கொள்ளாதீர்கள்! மண்பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு எடுக்கும் முயற்சி ஏன்? புதியதோர் உலகைச் செய்ய வேண்டும்! அந்த உலகம் எப்படி அமைய வேண்டும் என்று சிந்தனை செய்யுங்கள்! முடிவு எடுங்கள்! பிறர்பங்கைத் திருடுபவர்களிடமிருந்து உலகத்தை மீட்பீர்களாக! ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்ற நியதி, வாழ்வியலாகட்டும்! ஒத்தறிந்து செய்து உறவு கொண்டு வாழுங்கள்! நம்முடைய சமய நெறியில் காலையில் பிரார்த்தனை நெறிமுறை அமைந்தது ஆன்மசோதனைக்காகத்தான். பிழைகளைத் தவிர்த்து, புதுவாழ்வு பெற ஆன்ம சோதனை - தனிமைப்பட்ட பிரார்த்தனை துணை செய்யும்.

நாளும் மாற்றங்கள் தேவை நாளும் வளர்ச்சி தேவை. தேங்கியதெல்லாம் கேடு செய்யும். நமது மரபுகளைக் கூடத்