பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

437



இந்த மஞ்சள் அடிமை
மதங்களைச் சேர்க்கவும் பிரிக்கவும் செய்யும்
கெட்டவர்களுக்கு ஆசி வழங்கும்
குட்ட நோயைப் போற்றச் செய்யும்
திருடர்களுக்குப் பட்டம் வழங்கி
அரசப் பிரதிநிதிகளோடு சரியாசனமும்

பெருமையும் அருளும்.....

என்பது. ஆனால் பணமோ உழைப்பினால் ஆயது. உழைப்பினாலேயே பணம் படைக்கப்படுகிறது. ஆயினும், செல்வக் குவியல் முறையில் தன்னைப் படைத்த மனிதனையே அடிமைப்படுத்தும் ஆற்றல் பணத்திற்கு வந்துவிட்டது. நாம் இந்தப் பொய்ந்நெறியில் செல்லக் கூடாது. உழைப்பை மதித்து, உழைத்து வாழ விரும்ப வேண்டும். பணம் பண்ணும் வாழ்க்கையை நாம் மேற்கொள்ளும்பொழுது ஒழுக்கத்துறையில் விழிப்பாக இருக்க வேண்டும். பிறரை ஏமாற்றாமல் பிறர் உழைப்பின் பங்கைத் திருடாமல் வாழக் கற்றுக்கொள்! ஏமாற்றவும் கூடாது! ஏமாறவும் கூடாது! உனது உழைப்பின் படைப்பு. உனக்கும் சமூகத்திற்கும் உரியது. இதை யாரும் திருட அனுமதிக்காதே!

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பது அனுபவ விஞ்ஞானம். ஆயினும் உழைப்பினால் விளையும் உற்பத்தி சுரண்டப்படும்பொழுது மனிதன் அவனுடைய உற்பத்திப் பொருளிலிருந்து அந்நியமாக்கப்படுகிறான்! காலப் போக்கில் உழைப்புக்கே அந்நியமாகி விடுகிறான். உழைப்பைக் கண்டு அஞ்சுகிறான். நோயைக் கண்டு அஞ்சுவதுபோல், உழைப்புக்குரிய வாய்ப்புக்களையும் கண்டு அஞ்சுகிறான்! உழைப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளவே விரும்பும் குணம் வளர்ந்து வருகிறது. இது வாழ்வியலன்று! உழைக்கும் சக்தி, உழைக்க உழைக்கத்தான் வளரும். உழைப்பு பெருகி வளர்ந்தாலே வையகம் இயங்கும். வளரும்; வாழும்!

கு.xiii.28.