பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழைப்புக் குறைந்தால் மனிதகுலத்தின் தேவைகளைப் படைக்க முடியாமல் போகும். மனிதகுலத் தேவைப்பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய உழைப்பு, காலப்போக்கில் ஒரு தனி மனிதன் அன்றாட - சாதாரணமான தேவைகளை அடையும் சாதனமாகத் தரம் குறைந்துவிடும். நமது உழைப்பு. ஒரு பிழைப்புக் கருவியாக இடம் பெற்று விடக்கூடாது. “வெறும் சோற்று”க்காகவோ இந்த உழைப்பு? இல்லை இல்லை! உழைப்பு ஆற்றல் வாய்ந்தது! உலகை இயக்கும் சக்தி வாய்ந்தது! ஆதலால், உழைப்பு ஒரு சாதாரணமான பிழைப்புக் கருவியாகக் கூலிக்கு விற்கக் கூடியதாக இருத்தல் கூடாது! உழைப்பது என்பது நமக்குப் பசி, தாகம், பாலுணர்வு முதலியன இருப்பது போல, ஓர் ஆன்ம குணமாக அமைதல் வேண்டும். பிழைப்பதற்கு உழைப்பல்ல! உழைப்பே, வாழ்க்கை! வாழ்க்கையே உழைப்பு என்பதே மானிட இயலில் கார்ல் மார்க்ஸ் கண்ட நியதி, நீதி!

உழைப்பு இயல்பாக அமைய வேண்டும். பெருமை, அதிகாரம், பணம் ஆகிய தூண்டுதல்களால் இயங்கும் உழைப்பு நிறைநலஞ்சான்ற பயன்தராது அதுபோலவே கட்டுப்பாடு, வலியுறுத்தல், நெருக்கடிகளைத் தருதல் ஆகிய அடிப்படையில் இயங்கும் உழைப்பு, பயன்தராது! உழைப்பு ஓர் உயிர்க்குணமாக ஏன் உயிரியாகவே மாறி உழைத்தல் வேண்டும்.

இறைவன் திருக்காட்சியேகூட உழைப்பாளிகளுக்குத் தான் என்பதை, இறைவன் சந்நிதிமுன் உள்ள எருது - உழைத்து உழுது கொடுத்த (நந்தி) கற்றுத் தருகிறது. நாடாண்ட மன்னனைவிடப் புலன்களை உழுது வெற்றிபெற்ற அறிவு உழைப்பாளியாகிய பூசலார் வரலாறு சிறப்புடையது என்று வரலாறு கூறுகிறது. வைதீகப் புரோகித வாழ்க்கையிலும் உழைத்து வாழும் வேடர் குலம் காட்டும் அன்பு பெரிதென்று கண்ணப்பர் வரலாறு பறைசாற்ற வில்லையா?