பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உருவாக்கிறது. மனித குலத்தின் வாழ்வியல் நலனுக்கு உகந்த முறையில் மாறுபாடுகளை முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்குப் பதிலாக மதங்களே தம்முள் முரண்பட்டு நின்று சண்டை போடலாயின. “அபினி” ஒரு போதைப் பொருள்! அதுபோல “மதம்” என்ற ஒன்றை அனுபவிப்பவர்கள் மதத்தின் உயிர்நாடிக் கொள்கையாகிய மனித நேயத்தைக் காலப்போக்கில் மறந்தனர். மறந்தது மட்டுமல்ல. மனித நேயத்திற்கு மாறுபட்டும் நடந்தனர். ஏன், மதத்தின் பேரால் மனிதர்களையே கொன்று குவிக்கும் ஈனச் செயல்களுக்கு இரையாயினர். இன்றும் இரையாகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய கலவர ஒலியில் தாயுமானவரின் சமரச கீதமும் வள்ளலாரின் சன்மார்க்கமும் நமது காதில் விழவில்லை. காலப் போக்கில் கடவுளையே கூட மதப் புரோகிதர்கள் கடவுள் பெயரை பிழைப்புக் கருவியாகவே ஆக்கினர். கடவுள் பெயரை துஷ்பிரயோகம் செய்தனர். மானிடத்தை வளர்த்தல் – உயர்த்துதல் என்ற உயர் குறிக்கோளிலிருந்து மதங்கள் விலகி நீண்டதூரம் சென்றுவிட்டன. இன்று நாம் காண்பதெல்லாம் சுரண்டும் தன்மையும் ஆதிபத்திய குணாம்சமும் சண்டைபோடும் மூர்க்கத்தனமும் உடைய மத அமைப்புகளையே! திருக்கோயில்கள் தேவை! ஆனால், அவை உரிமை பெற்ற – பொருளாதார உரிமை பெற்ற மனிதர்களின் சுய விருப்பத்தில் கட்டப்பட வேண்டும். அன்றே மதம் அபினியாக இல்லாமல் ஆன்மிகமாக விளங்கும். இன்றைய மனிதன் கடவுள் முன்னேகூட, கடவுள் சந்நிதியில்கூட அடிமையாகவே நிற்கிறான். அடிமையாகவே நடத்தப்படுகிறான்! இந்த நிலையில் மானுடம் வெற்றி பெறுவது எங்ஙனம்?

வரலாற்றில் கூட உரோமாபுரி, மதத்தின் செல்வாக்கிலிருந்து விடுபட்ட பின்னரே வெற்றி பெற்றது. இந்தியாவிலும் அண்ணல் காந்தியடிகள் குறுகிய சமய பேதங்களிலிருந்து நம்மை விடுதலை செய்து, இந்தியராக்கிய பிறகுதான்