பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

447


ஒருவருக்குக் குடியிருக்க மனை இல்லை, தேவை, இன்னொருவருக்கு இரண்டாவது மூன்றாவது வீடுகளுக்கு மனைதேவை. வாழ்வதற்கல்ல; சொத்துக்காக என்றால் வாழ்வதற்குத் தேவைப்படுவோருக்கே மனை அவசியம். இங்கு விட்டுக் கொடுப்பதே சமூக உறவுகளைப் பாதுகாக்கும். சமூகம் தேவைகளை உந்து சக்தியாகக் கொண்டு இயங்குகிறது. இயக்கத்தின் உண்மைநிலை தன்னலமேயாம். இது உண்மை நிலை. இந்த நிலையை எதிர்த்துப் போராடுதலால் பயனில்லை. ஆயினும், உடன்போகவும் இயலாது. ஆதலால், மனித – சமூக உறவுகளை வளர்ந்து வரும் பொருளாதாரம் பாதிக்காமல் செய்ய நல்லவர்களுடன், பொதுநோக்குடையவர்களுடன் உறவு ஏற்படுத்திச் சமன்செய்ய வேண்டும். வேக மாக வளர்ந்து வரும் ஆடம்பரத்தன்மை வாய்ந்த சுகவாழ்வு நுகர்வுகளின் படைப்பைக் கட்டுப்படுத்த வேண்டும். இன்றியமையாத் தேவைகள் உடை, உணவு, உறையுள் எல்லாருக்கும் கிடைக்கும் வரையில் எல்லாருமே எளிய வாழ்க்கையை நோன்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மானுட வாழ்க்கைக்குப் பொருளாதாரம் இன்றியமையாத் தேவை மட்டுமே. ஆனாலும், பொருளாதாரம் வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல; பயன்பாடும் அல்ல. மனித நேயமும் மனித உறவுகளுமே முதன்மையானவை. இந்தத் தத்துவத்தையே புத்தரும், அப்பரடிகளும் பட்டினத்தாரும் கற்றுத் தந்துள்ளனர். வாழ்தலும் வையத்தை இயக்குதலும் நமது பொறுப்பும் கடமையுமாகும்.

58. [1]தனிமனித உரிமையா சமுதாய உரிமையா?

தனி மனிதனுக்கு உரிமையுண்டா இல்லையா என்பது இங்கு விவாதமேயல்ல. தனி மனிதனுக்கு உரிமையில்லாத


  1. பொங்கல் பரிசு