பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

451


பல பேர் அவ்வாறு வளர்ந்த சமுதாயத்திலே தோன்றாதவர்கள். ஆனாலும் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஊருக்கு ஒரு ஜவஹர்லால் நேரு இருக்க முடியும். அவர் பிறந்து மொழி பயின்று வளர்கிற காலத்திலே இந்த நாடு அடிமை நாடாக இருந்தது. அன்றைக்கு நன்கு வளர்ந்திருந்த ஒரு குடும்பத்திலே அவர் பிறந்தார். அதனால் அவரது வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பும் இருந்தது. நம் நாட்டைப் பொறுத்த வரையில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேருக்கு வாய்ப்புக்கள் இன்மையால் அவர்கள் வளரவில்லை. எனவே தான் நம்முடைய அரசாங்கம் இந்த வாய்ப்புக்களையும் வசதிகளையும் எல்லோருக்கும் வாரி வழங்கும் முறையில் செயற்பட்டு வருகிறது. எல்லோருமே ஜவஹர்லால் நேரு போல வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதனால், இன்னும் 50 ஆண்டுகள் – இரண்டு தலைமுறைகள் போனால், ஒரு ஆளிடத்தில்தான் தனிமனித வளர்ச்சி இருக்கிறது என்று சொல்லுகிற நிலை இல்லாமற் போய்விடும். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து நாம் மீண்டும் இங்கு பிறந்தால் அந்த நிலையை நேரில் காணலாம். இல்லையானால், அப்போதைய வரலாறு அதை உணர்த்தும்.

தனிமனித வளர்ச்சி மிகவும் முக்கியமானது. தனி மனித உரிமை நசுக்கப்பட்டால் ஒரு சமுதாயம் வளர முடியாது. எனவே தனிமனித உரிமை என்றும் நசுக்கப்படாது – நசுக்கப்படக் கூடாது. சோஷலிச பாணிச் சமுதாயத்தில் தனிமனித உரிமை சாவதாகக் கருதக் கூடாது. மாறாக தனிமனித உரிமை காப்பாற்றப்படும்.

தனிமனித உரிமை நசுக்கப்பட வேண்டும் – பொசுக்கப் பட வேண்டும் – பறிக்கப்படவேண்டும் என்பது சோஷலிச பாணிச் சமுதாயத்தின் இலட்சியமல்ல. தனி மனித உரிமை நசுக்கப்பட்டுவிட்டால் – ஒடுக்கப்பட்டு விட்டால் – பிடுங்கப் பட்டுவிட்டால் சமுதாயத்தில் ஒரு தேக்கம் – சூனியம் ஏற்பட்டு விடும். தனிமனித ஆசைகள் – உணர்வுகள்