பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தூண்டிவிடப் படவேண்டும். இரண்டு சட்டைகள் போடுகிற இடத்தில் 4–வது சட்டை போட வேண்டும் என்ற ஆசை வருகிறது; அது தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அடையாளம்.

“ஏதோ சினிமாப் பார்த்துத் தகர டப்பாப் பாட்டுக் கேட்டதற்குப் பதிலாக வானொலி கேட்க வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது. அது வளர்ச்சியின் அடையாளம்” என்று நமது காமராஜர் அவர்கள் கூறுவார்கள். நம்முடைய நாட்டில் எல்லாரும் எல்லா நலன்களும் பெற்றுவாழ வேண்டும் என்பதுதான் நமது அரசின் இலட்சியம். இதனால் சமுதாய உரிமை வளர்கின்ற போது தனிமனித உரிமை அழிந்து போகாது. ஆனாலும், நாட்டுக்குப் பயன்படும் பணத்தைத் தனியொருவன் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டி வைப்பதைச் சமுதாயம் அனுமதிக்காது.

தனி மனிதனுடைய சிந்தனையுரிமையை – அறிவுரிமையை அரசு பிடுங்க முடியுமா? தனிமனிதனுடைய பேச்சுரிமைக்கு மரியாதை கொடுப்பது நமது சுதந்திர நாடுதானே! இங்கு சமுதாய உரிமைக்குக் கேடு தரும் தனி மனித உரிமை கட்டுப்படுத்தப்படும். சமுதாய உரிமைக்குக் கேடு தராத தனிமனித உரிமைகள் உயிரினும் இனிதாகப் போற்றப்படும். ஆம் சமுதாயத்திற்குக் கேடு பயக்காத – சமுதாயத்தை அரித்துத் தின்னாத தனிமனித உரிமைகள் தெய்வச் சிலைகளைப் போலத் தூய்மையாகப் போற்றிக் காப்பாற்றப்படும். இதுதான் இந்த நாட்டின் பொதுவிதி. இதற்காகத்தான் இந்த நாடு சுதந்திரம் பெற்றது.

“இந்த நாட்டில் இருக்கிற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத, கட்சி வேறுபாடுகளின்றி எல்லா விதமான உரிமைகளையும் இந்த நாட்டில் பெறுவார்கள் என்பதுதான் நமது அரசியல் சாசனம் – அரசியல் வேதம். அரசியல் சாசனம் வழங்கிய இந்தத் தனிமனித உரிமையை இந்த உலகத்தில் இனி யாராலும் பறிக்க முடியாது என்றாகி