பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

453


விட்டது. இனி மனித உரிமைக்கு ஆபத்து வரப்போவதே இல்லை. ஆனால், தனிமனிதன் தன் திறமையினால் – போட்டியினால் – வலிமையினால் – வாய்ப்பினால் சமுதாயத்தினுடைய பெருவாரியான உரிமைகளை வாரிச் சுருட்டி முடக்கிக் கொள்ளுவதை அனுமதிக்க முடியாது.

நம்முடைய சுதந்திர நாட்டில் தனிமனித உரிமை போற்றிப் பாதுகாக்கக் கூடியது. ஆனாலும், சமுதாய உரிமைக்குக் கேடுவரும் போது, தனிமனித உரிமையைப் புறக்கணித்துச் சமுதாய உரிமைக்குத்தான் முதன்மை தர வேண்டும். அதுதான் நியதி – அதுதான் நியாயம் – அதுதான் ஒழுக்கம் – அதுதான் தர்மம் – அதுதான் கடவுள் நெறி!

59. சேவை சங்கங்களின் பங்கு – பெண்களை அரசியலில் ஈடுபடுத்துவது பற்றிய கருத்து

இந்திய மரபு வழியிலும், சிறப்பாகத் தமிழ் நாகரிக வழியிலும் பெண்களுக்கு உரிமைகளும், மதிப்பீடுகளும் இருந்தன. தலைமகன் பொருளீட்டுவோன் ஆயினும் அப்பொருளை வைத்து நிதி நிர்வாகம் செய்து குடும்பத்தை நடத்தியது பெண்ணேயாம். “வளத் தக்காள் வாழ்க்கைத் துணை” என்பது குறள். காலப்போக்கில் பெளத்த, சமூக, மாயாவாத மதங்களின் தாக்கத்தால் பெண்களின் மதிப்பு குறைந்தது.

பெண்களின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம். பெண்ணே அடுத்த தலைமுறையின் விழுப்பத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பொறுப்பேற்கிறாள். பெண்களுக்குக் கல்வி தேவை; சொத்துரிமை தேவை. ஆயிரம் தான் பணத்தை – பணத்தின் மதிப்பீட்டால் குறைத்துப்பேசினாலும் சமுதாயத்தில் பணத்திற்கு இருக்கிற மதிப்பு


கு.xiii.30.