பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

454

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருபொழுதும் குறையாது. திருக்கோயிலில் சுவாமியைப் பிரதிஷ்டை செய்யும்பொழுது கூடப் பணம் போட்டுத்தான் பிரதிஷ்டை செய்கின்றோம். ஆதலால், பெண்களுக்கு என்று சொத்தும் தனி வருவாயும் இருப்பது அவசியம். ஆதலால், சேவைச் சங்கங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு அடியிற்கண்ட பணிகளைச் செய்ய வேண்டும்.

1.பெண்களுக்கு உயர் கல்வி, தொழில் கல்வி வரை தடையின்றி வழங்க வேண்டும்.

2.பெண்களின் திருமணங்கள் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றார்போல நடைபெற வேண்டும்.

3.பெண்கள் வேலை வாய்ப்புப் பெறத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் வேலைக்குப்போவது, பொருள் ஈட்டுவது என்ற நெறிமுறை தோன்றியபின், பெண்களின் வேலைச்சுமை கூடியிருக்கிறது. அலுவலங்களில் – பள்ளிகளில் ஏழு அல்லது எட்டு மணி நேரம் வேலை பார்த்து மீண்டும் விட்டுக்குச் சென்று ஒரு மனைவி – தாய் என்ற அடிப்படையில் அமைந்த பணிகளையும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சில ஆண்களே மனைவியின் வீட்டுப் பணிப் பொறுப்பில் பங்கேற்கிறார்கள். பெரும்பாலோர் பங்கேற்பதில்லை. அதனால், பெண்களின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளையும் முறையாக, நன்றாக வளர்க்க முடிவதில்லை. ஆதலால் அரசு, பெண்களுக்கு அலுவலக நேரத்தில் சலுகை தர முன்வரவேண்டும். பெண்களின் உரிமை மதிப்பீடுகள் மாறி வருவது உண்மை. இருப்பினும் நிலத்தெளிதல் போலத்தான் இருக்கிறது. இன்னமும் பெண்களைப் பொறுத்தவரையில் பொழுது விடியவில்லை. ஆண்களின் மேலாதிக்கச் சமுதாயத்தின் இறுக்கமான பிடிகள் அசைவு கண்டுள்ளன; ஆனால் நெகிழ்த்து விடவில்லை; நெகிழ வைக்க வேண்டும்.