பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

465


திறன்களும் முறைகளும் கூட மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். இந்த வித்தியாசத்தை ஒரு சில மூத்தோர்களே தாங்கிக் கொள்வர்; ஒருக்கால் தாங்க இயலாதது எனக் கருதின் இதமாக அறிவுறுத்தி நெறிப்படுத்துவர்! மிகப் பலர் உளப்பாங்கியல் அறியாவண்ணம் இடித்துரைத்துக் காயப்படுத்துவர்; இல்வாழ்க்கையைக் கசப்பாக்கி விடுவர். தலைமகன் பாடு திண்டாட்டம்! தாயின் பக்கமா? தாரத்தின் பக்கமா? இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து அமைதியான நல்வாழ்க்கைக்கு வழிகோலுவது தனிக்குடும்ப அமைவேயாம்.

அப்படியானால் குடும்பப் பரிவு பாசம் பாதிக்காதா? என்று கேட்கலாம். மாமன் மாமி உறவு பாதிப்புக்குள்ளாகாதா? என்று கேட்கலாம். ஒருக்காலும் பாதிப்புக்குள்ளாகாது. பிரிவு அன்பைத் தூண்டி வளர்க்கும். அன்பைச் செழுமையாக வளர்க்கப் பிரிவு துணை செய்வது போல வேறொன்றும் துணை செய்யாது. பிரிவு, பிரிந்தவர்களின் அருமைப்பாட்டினை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். அதனால்தான் போலும் களவியலில் கூடக் காதலுக்குப் பிறகு பிரிவு வைத்தனர். மாணிக்கவாசகர் இறைவனைக் கண்டு பின் பிரிந்ததால்தான் அன்பின் பிழிவாகிய திருவாசகம் கிடைத்தது. சின்னமனிதர்கள் அல்லது அற்ப மனிதர்கள்தான் பிரிவில் மறப்பர். இத்தகைய மனிதர்கள் ஒன்றாக இருந்தாலும் ஒருமை நலத்துடன் வாழார். குடும்பத்தில் கோள் முதலியவற்றால் கலகம் விளைவிப்பர். வளர்ந்தவர்கள் பிரிவின் பொழுது அன்பினை வளர்த்துக் கொள்வதாக உணர்ச்சி கலந்த நட்புப் பாங்கு வளரும்.

செல்வி, அடிக்கடி மாமனார் மாமியார் வாழும் இல்லத்திற்குச் செல்! அவர்களுக்கு உவப்பான பண்டங்களை எடுத்துக் கொண்டு போய் வழங்கு! நலம் கேள்! நலம் செய். அன்பாகப் பேசு! மாதத்தில் சில நாள் உன் வீட்டுக்கு அழைத்து வா! நல்ல வண்ணம் உபசரணை செய்! அவர்கள்