பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

468

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேமிப்புக் கணக்கு அல்லது ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பிரிமியம் கட்ட வேண்டும். அவர்கள் வளர வளர அந்தச் சேமிப்பும் வளர்ந்து அவர்கள் படிப்பு திருமணம் முதலியவற்றிற்குப் பயன்படும். அதுபோகக் குடும்பத்திற்கென ஒரு சேமிப்பு எப்படியும் வருவாயில் 10 விழுக்காட்டுக்குக் குறையாமல் 25 விழுக்காடு வரையில் சேமிக்க வேண்டும். இந்த சேமிப்புக்குப் பிறகு எஞ்சிய தொகையில்தான் வாழ்க்கையை நடத்த வேண்டும். வாழ்க்கைச் சடங்குகளைக் குறைந்த செலவில் நடத்த வேண்டும். சாமிகும்பிடுவதில் அதிகம் செலவழிக்கக் கூடாது. பொருட் செல்வம் போற்றுவார்கள் உண்டு, என்ற திருக்குறளை மறவற்க

நீ, தாயாகப் போகும் செய்தி செவிக்கினிய செய்தி! தாய்மைப்பேறு தவம் செய்துபெறும் பேறு. “இறைவன் அடிக்கடி உலகத்திற்கு, நான் வர முடியாமையால் தாயைப் படைத்தான்!” என்று கூறுவர். தாய் அற்புதமான வியக்கத்தக்க படைப்பாளி! தாயின் கருப்பையே மானுடத்திற்கு வடிவம் தருகிறது; பொறி, புலன்களை வழங்குகிறது. கருவுற்ற எட்டாவது மாதத்திலிருந்தே குழந்தைக்குப் புலன்கள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இந்தக் காலம் தொட்டே தாய்க்கு நல்ல சிந்தனை தேவை. நல்ல நூல்களைப் படித்தல், படிக்கச் செய்து கேட்டல் முதலிய பழக்கங்கள் தேவை. ஒரு குழந்தை கருவுற்ற எட்டாவது மாதத்திலிருந்து அது பிறந்து எட்டு வயது வரையில் கவனத்துடன் பேணி வளர்த்தால் – அறிவு நலமும் அன்பு நலமும் கெழுமிய நிலையில் – வளர்த்தால் அந்தக் குழந்தை சிறப்புற வளரும். இந்த உலகை வென்றெடுக்கும் குழந்தையாக விளங்கும்.

குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர்,

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை; அறிவறிந்த
 மக்கட்பே றல்ல பிற”–குறள் 61