பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்ந்தவர்கள் திருக்குறளை இலக்கிய உலகுக்குத் தள்ளி விட்டனர். அதோடு திருக்குறளுக்குத் தம் நிலையில் உரையெழுதி, முற்போக்கு அணியிலிருந்த திருக்குறளைப் பிற் போக்கு அணியில் சேர்த்துக் கொண்டனர். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளுக்கு, பிறப்பில் எல்லா உயிர்களும் ஒத்த உரிமை உடையன என்ற இயல்பான உரை காணாமல், “கருவாய்ப் பட்டுப் பிறப்பதில் எல்லா உயிர்களும் ஒத்தன” என்று உரையெழுதித் திருக்குறளின் பொதுத் தன்மையைச் சீர்குலைத்து விட்டனர்.

டாக்டர் அம்பேத்கார் நமது தலைமுறையில் வாழ்ந்த பேரறிஞர். புதுயுகம் படைத்த மனு, சுதந்திர இந்தியாவுக்கு ஓர் அரசியற் சட்டத்தை இயற்றிக் கொடுத்த மாமேதை, உயர் மரபுகள் சார்ந்த ஜனநாயகப் பண்புகள், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட சட்ட வரைவுகள் நம்முடையவை என்று பெருமை கொள்ளலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தை அழுத்தி வருத்திக் கொண்டிருந்த தீண்டாமை மற்றும் பல வேற்றுமைகளுக்கு சமாதி கட்டி எல்லாரும் இந்தியர்; எல்லாம் ஒரு நிலை; ஒரு விலை என்ற முதன்முதலாக மனித உரிமைகளைச் சட்டத்தின் முன் உறுதி செய்த பெருந்தகையாளர் டாக்டர் அம்பேத்கார். இந்தத் தீண்டாமை, சாதி வேற்றுமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியாதுபோன புத்தர், ராமானுஜர், அப்பரடிகள் ஆகியோர்களின் ஆன்மாக்கள் இப்போது மகிழும்.

அரசியல் சட்டப்படி இந்ததிய சமூகத்தில் பிரிவில்லை. பேதமில்லை. ஆயினும் இந்திய சமூகத்தில் நடைமுறை வாழ்வில் வல்லாங்கு வாழ்பவர்களே தங்களுடைய பிடியை இறுக்கமாக்கிக் கொண்டு வருகின்றனர். ஆதலால், நமது அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளை நமது இந்தியா முற்றாக அனுபவிக்க இயலவில்லை. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பெற்றுள்ள உரிமைகள் கடைகோடி