பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

477


முடியும். அவனுக்கு ஒன்றின்மீது மட்டும் உரிமையிருக்குமானால், அந்த ஒன்று எது? காணியா? இல்லை, காசுகளா? இல்லை, கடைகளா? இல்லை, ஆலைகளா? இல்லை, தொழிற்சாலைகளா? இல்லை, ஆடுமாடுகளா? இல்லை, பொன்மணிகளா? இல்லை! பின் என்னதான் அது? வேறொன்றுமில்லை. நமது உள்ளம்தான்! உலகத்தையே உரிமை பெற்றிருந்தாலும் நமது உள்ளத்தினிடத்து நமக்கு உரிமையில்லாது போகுமானால் எந்த உரிமையும் நிலை நிற்காது. அதனாலன்றோ, “உள்ளம் உடைமை உடைமை” என்றது வள்ளுவம். இந்த உலகத்திலேற்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும், இன்று நம்முன்னே நிகழ்ந்து கொண் டிருக்கும் மூலமும் முதலும், உள்ளமேயாம். நிலத்தின் இயற்கையும் செயற்பாலதேயாம். அறிவுப் புலனும் ஆற்றுதலுக்குரியதேயாம். ஏன் ? கோயிலில் கடவுளும் மனிதனின் படைப்பேயாம். நமது உள்ளத்தில் நமக்கு முழு உரிமை இருக்குமானால் முடியாதது ஒன்றில்லை.

உள்ளமோ விந்தையானது; அது கைக்கு அகப்படுவதில்லை; விரைவில் பயணம் செய்கிறது; கடிதில் பற்றுகிறது; துன்பத்தை இன்பம் போலக் காட்டுகிறது; தனி உணர்வை வளர்க்கிறது. ஆயினும், உள்ளத்தைக் கெட்டதென்று சொல்ல முடியாது. திருஞானசம்பந்தரும், “நாளும் நீ நினையாய், நன்னெஞ்சே” என்று நெஞ்சைக் குறிப்பிடுகின்றார். அதை முறையாகப் பழக்கப்படுத்தினால் நல்ல வேலை ஆள். கைக்கு அடக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் அதனிற் சிறந்த தோழமை இல்லை. ஆனால், அதை எஜமானன் ஆக்கினால் வந்தது கேடு!

உள்ளத்தை ஒரு பொழுதும் ஓயவிடக்கூடாது. அதற்கு ஒழுங்காக முறை வைத்து வேலை கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும். அதற்குரிய நல்ல வேலைகளைக் கொடுக்காது உறங்க வைத்தால் அது உறங்குவதில்லை; ஊர்சுற்றப் புறப்பட்டுவிடும். உள்ளத்திற்கு நல்ல சிந்தனைகளையும்