பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருத்துக்களையும் உணவாகத் தரவேண்டும். அன்பினை நீராக வார்க்க வேண்டும். இனிய செயலினை அதன் மூச்சாக்க வேண்டும். உயர்ந்த பக்தியினை அதன் உயிர்துடிப்பாக்க வேண்டும். அப்பொழுது உள்ளம் செழித்து வளரும். வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும். மனித சமுதாயம் அனைத்தும் உறவு கலந்து உண்டு களித்து வாழும்! எங்கும் இன்ப அன்பு மலர்ந்து மணம் பரப்பும்!

திருச்சி வானொலியில் ஆற்றிய அறவுரை
64.[1]நன்றியின் அடையாளம்

வேற்றுமை இருப்பது இயல்பு

மனிதர்கள் அனைவரும் உருவத்தால் ஒரே வகையினரே, இதுகூட முற்றான உண்மையன்று. சிந்தனையில், உணர்வில், வாழ்க்கை முறைகளில் வேறுபாடுகள் இருப்பது இயற்கை. அதுமட்டுமல்ல. வேற்றுமைகள் இருப்பதுதான் உயிர்ப்புள்ள சமுதாயத்திற்கு அடையாளமாகும். வேற்றுமைகள் உள்ள சமுதாயத்தில் ஒருமைப்பாடு உணர்வு கலந்த உறவு வளராது-நிலை பெறாது என்று எண்ணுவது தவறு. ஒருமைப்பாட்டுக்கும் உறவுகளுக்கும் வேற்றுமைகள் தடையல்ல. இந்த வேற்றுமைகளை அணுகும் பாங்கில்தான் இருக்கிறது. தற்சலுகையுடையவர்கள், தன் மதிப்பு அதிகம் பாராட்டுபவர்கள், அதிகாரப் பசியுடையவர்கள், மற்றவர்களை மதிக்கத் தெரியாதவர்கள், சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள் தாம் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்துவார்கள். ஏன்? வேற்றுமைகளை முரண்பாடுகளாகவும் பகையாகவும் மாற்றி வளர்ப்பர்.


  1. கடவுளைப் போற்று! மனிதனை நினை!