பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமர்ந்திருப்பான். அவனுக்குத் தெரியுமா, நாம் சுகாதாரக் குறைவாக வாழ்கிறோம் என்று? கங்கையும் காவிரியும் அவனுடைய தத்துவத்தின்படி தீர்த்தங்கள்தாம். ஆனால், ஆற்றின் கரையோரங்களையே அவன் மலங்கழிக்கும் இடமாகக் கொண்டு மாசுபடுத்துவதைப் பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. ஊராட்சி மன்றங்கள் கிராமத்தின் சுகாதாரத்தைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாக இருத்தல் வேண்டும். நோயற்ற வாழ்க்கையும், நிறைந்த வாழ்நாளும் போற்றுதற்குரியன. அதனால் வீட்டையும், வீதியையும் தூய்மையாக வைத்துக்கொள்ள கிராம மக்களைப் பழக்குதல் வேண்டும். அதனாலன்றோ பாரதி.


"சந்தித் தெருப்பெருக்கும்
சாத்திரம் கற்போம்"

என்றான், மேலும் வாழ்க்கைக்குத் தேவையான- சத்துள்ள இயற்கை உணவுகளை நமது கிராம மக்கள் எண்ணிப் பார்த்து உண்பதில்லை. வெறும் அரிசிச்சோறு, மனித வாழ்க்கைக்கே மாபெரும் பகையான புளி, மிளகாய் இவற்றில் மூழ்குகிறார்கள். ஆங்கிலேயன் அதிலும் கெட்டிக்காரன் ஆனான். உடலுக்கு இதந்தரும் நம்முடைய மிளகை வாங்கிக்கொண்டு, எரியூட்டும் மிளகாய் தந்தான். நாமோ மிளகாய்ச் சட்னி அபாரம் என்போம்! பொருந்தா உணவுப் பழக்கத்தைத் தவிர்க்க மக்கட்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கைக்குத்த லரிசி, நல்ல காய்கறிகள், பால், தயிர், இவைகளை உண்டு உடல் நலத்தோடு உங்கள் கிராமத்து மக்கள் வாழும்படி செய்ய வேண்டும்.

கிராம மக்கள் நிலையான பொருள் வளமும் சீரான வாழ்வும் பெற ஊராட்சி மன்றங்கள் ஊக்கமூட்டி வழி நடத்த வேண்டும்.

கிராமச் சமுதாயத்தில் பெரும்பான்மையோராக இருக்கும் விவசாயிகள் துணைத்தொழில் இன்றிப் போதிய