பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அட்டைப்படம் போட்டிருக்கிறதா என்று பார்க்கிறோம். புத்தகத்தை எழுதியவர் ஏற்கனவே நன்கு விளம்பரம் ஆனவர்தானா என்று பார்க்கிறோம். அப்படியிருக்க நாம் எப்படி நல்ல இலக்கியங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்?

உலைப் பானையில் ஊற்றிய தண்ணிர் கொதிப்பது போல, மனிதனும் சீக்கிரம் உணர்ச்சி வசப்பட்டுக் கொதிப்படைகிறான். இந்நிலையானது, மழைபெய்து தண்ணிர் புரண்டு வருகிறது; அதனைக் கால்வாய்களின் வழிக் கொணர்ந்து, ஏரிகளில் தேக்கிக் கழனிக்குப் பாய்ச்சும் போதுதான் உரிய பயன் ஏற்படுகிறது. அதுபோல மனிதனிடம் உணர்ச்சிகள் தோன்றுவதியற்கை, அவ்வுணர்ச்சிகளை அறிவுக்கால்கள் வழிச்செலுத்தி அனுபவம் என்கின்ற ஏரியில் தேக்கி செயல்முறைக் கழனியில் செலுத்தினால் உரிய பயன் விளையும். சிந்திக்காத மனிதனின் உணர்ச்சிகள் பொட்டல் காட்டில் பெய்த மழையைப்போல் பயன்படாமல் போய்விடும்.

வாழ்க்கையைப் பற்றி முதன் முதலில் கவலைப்பட்ட மனிதன் தமிழன் தான். வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்கும் எண்ணம் தமிழனுக்கு இருந்ததைப் போல ஏனையோருக்கு இருந்ததாகக் குறிப்பிடமுடியாது. தொல்காப்பியக் காலக் கவிஞன் வீட்டுச் சிக்கலைப் போக்குவது பற்றி எண்ணிச் சிந்தித்து அதற்கான வழியையும் கண்டிருக்கிறான். மனிதனின் வீட்டு வாழ்க்கைக்கு அகத்திணை என்றும் சமுதாய வாழ்க்கைக்குப் புறத்திணை என்றும் இலக்கணம் கண்டவன் தமிழன்.

வரலாறு எழுதும் முறை அண்மைக் காலத்தில் தோன்றியதே. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் தொடர்பாக ஒரு தவற்றைச் செய்து வருகிறார்கள். அதாவது, வெறும் புள்ளி. விவரங்களையே வரலாற்றில் எழுதித் தருகிறார்கள். வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் அவற்றின் புறஇயல் காரணங்களையும் மட்டும் காட்டுவது நிறைவான வரலாறு அல்ல. மனித சமுதாயத்தில் மனிதன் கருத்தால் –