பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

485


கொள்கையால் வளர்ந்த – வழிநடை பயின்ற குறிப்புக்களையும் வரலாறு தரவேண்டும். அப்போதே சமுதாயத்தில், சென்ற காலத் தவறுகள் குறையும்; எதிர்காலச் சிறப்புகள் தோன்றும். இதனை வரலாற்றாசிரியர்கள் உணர்ந்து வரலாறுகள் எழுதித் தர வேண்டும். இன்று சிலர் மண்ணையும் பொன்னையும், இலையையும், செடியையும் ஆராய்வார்கள். இந்த உலகில் புரியாத புதிராக இருக்கின்ற மனிதனைப்பற்றி ஆராய்வதில்லை. கொள்ளுகின்ற கோலம் – ஆற்றுகின்ற செயல் – சிந்தனை எல்லாம் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கின்றன. ஒரு மனிதனே கூட அவனுடைய வாழ்க்கையின் தரம் பல கட்டங்களில் மாறுகின்றன.

போரையும் காதலையும் சங்ககால இலக்கியங்கள் பாராட்டின. ஆதலால் தமிழர்களிடத்துப் போர் உணர்வு மிகுந்திருந்தது. ஆனால் போருக்குப் பகைவர்கள் – அந்நியர்கள் அகப்படவில்லை. அதன் காரணமாக – தமிழ் மன்னர்கள் தமக்குள் பொருதி அழிந்தனர். தமிழர்கள் உள்ளத்தில் ஒற்றுமையுணர்வு உருவாகி வளர்ந்தாலே நாம் வாழ்வோம்; தமிழ்ச்சமுதாய மாளிகை தோன்றி எழும்; தமிழர்களிடத்தில் தனிமனித உணர்வே மிகுதி; தன்னைத் திட்டினால் ஆத்திரப்படுவான்; ஆனால், தன்னுடைய தமிழ் இனத்தை – மொழியை – நாட்டைத் திட்டினால் ஆத்திரப்படமாட்டான். தமிழன் சமுதாயத்தை மறந்துவிட்டு வீட்டுக்குள் அடங்கி விட்டதையே இது காட்டுகிறது.

பலர் பசுமாட்டைக் குளிப்பாட்டுவார்கள்; பொட்டு இட்டு இலட்சுமி என்று பாராட்டுவார்கள். அதற்குத் தீனி மட்டும் சரியாக வைக்க மாட்டார்கள். அதுபோல தமிழர்கள் இலக்கியங்களைப் படிப்பார்கள் – பாராட்டுவார்கள். ஆனால் படித்தவற்றைச் சீரணித்துக்கொள்ள மாட்டார்கள்: வாழ்க்கையில் ஏற்று நடைமுறைப்படுத்த முன் வரமாட்டார்கள். நடைமுறைக்கு வராத கல்வி ஊற்றில்லாத கிணறு – சிந்தனை மணமில்லா மலர் – அறிவு விளைவில்லாக் களர் நிலம்.

கு.XIII.32. கு.XIII.32.