பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

486

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பழைய மனிதன், வெயில் பனி மழை இவற்றின் தாக்குதலிலிருந்து உடலைக் காப்பாற்றிக் கொள்ளவே வீடு கட்டினான். ஆனால் இன்றோ பக்கத்து வீட்டுக்காரனைத் திருடனாக அல்லது பகைவனாக ஆக்கி அவனிடமிருந்து தன்னை – தன்னுடைய உடைமையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற களவு – காவல் சிந்தனையின் தொடர்பில் வீடுகட்டுகிறான். இப்படி மனிதர்களுக்குள் நிலவும் அவநம்பிக்கையையே மூலப்பொருளாகக் கொண்டு வளர்ந்து விட்டது காவல் துறை; பெருகி விட்டன பூட்டுக் கடைகள். பூட்டுவிற்பனையாளர்கள் பணம் குவிக்கின்றனர்.

இன்று பலர், கையிலிருந்து பணம் கொடுக்கும் போது ஏன் எதற்கு என்று ஆராய்கிறார்கள். ஆனால் தமது கைக்குப் பணம் வரும்போது இது எப்படி வருகிறது? நியாயமான வழியில் வருவதுதானா என்று சிந்திக்க விரும்புவதில்லை. அப்படிச் சிந்தித்தால் நாட்டில் ஒழுக்கமும், நாணயமும் வளரும். இந்த அவல நிலைக்குரிய காரணம் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லாமையே என்பதை நாம் உணர வேண்டும். மாணவர்கள் நிறையப் படிக்க வேண்டும்; தரமான இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்; படித்தவற்றைச் சிந்தனை செய்து தெளிவு பெறுதல் வேண்டும். சிந்தனையைச் செயற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும். முயற்சியின் பயனாக இப்பாரினைச் செழிக்கச் செய்து – இன்ப அன்பிலே திளைத்து வாழ வேண்டும்.

67.[1] நாத்திகமும் ஆத்திகமும்

இன்று உலகம் முழுவதும் ஆத்திகமும் பரவி வளர்கிறது; வளர்ந்துவரும் ஆத்திகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாத்திகமும் வளர்ந்து வருகிறது. ஆத்திகம் – நாத்திகம் இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு? என்ன


  1. விடுதலை மலர், செப்டம்பர் 1993