பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவையானவையும்கூட. ஆனால் - இவற்றை நன்னெறியில் பயன்படுத்தாது போனால் - தலைவர் பெரியார் அவர்கள் மனித சமுதாயத்தின் பால் கொண்ட பரிவை நிறைவேற்ற இயலாமல் போகும்.

68.[1] மனக் கோணல்கள்

மனிதன் ஒரு விந்தையான படைப்பு. மனித உலகத்தை இல்லை! எண்ணில் பல் கோடியாகப் பல்கிப் பெருகியிருக்கும் மனித உலகத்தை நாம் குறிப்பிடவில்லை. ஒரு மனிதன் - ஒரே ஒரு மனிதன்! ஆம், அவனே ஒர் உலகம்! அவனுடைய உணர்வுகள் ஒன்றா. இரண்டா? “கருதுப கோடியும் அல்ல பிற” என்று குறள் கூறும். கோடானு கோடி எண்ணங்கள்! மனித வாழ்க்கையின் மையம், மூலம், முதல் எல்லாமே மனம்தான். அம்மம்ம, இந்த மனம் என்ற ஒன்றின் ஆற்றல் எவ்வளவு பெரியது! நுண்மையிலும் நுண்மையதாக இலங்கும் மனம், பருமனிலும் பருமனாகிய பல் பொருள்களையும் இயக்குகிறது; நொய்யச் செய்கிறது. மனித உலகத்தின் வரலாறுகளே மன இயக்கங்கள் படைத்தவைதானே!

மனம் உருவெளி காண முடியாது நுண் பொருள்; ஆயினும், ஆற்றல் மிக்குடையது. ஆவதற்கும் அழிவதற்கும் மனமே அடிப்படை. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனமே அடிப்படை. உயிர் பயனுடைய வாழ்க்கையை நடத்தத் துணை செய்வது மனமே. உயிர், உலகத்தை அறியவும், அறிந்து அனுபவிக்கவும் துணை செய்வதும் மனமே. மனமே சிந்திக்கிறது. ஆதலால், மனத்தின் இயக்கங்களாகிய சிந்தனையும் புத்தியும் செய்திகளைச் சிந்தனை செய்து ஆராய்ந்து நிர்ணயித்தும் உறுதிப்படுத்தியும் கடமையைச் செய்கின்றது.


  1. வானொலியில்...