பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

491



உடல் வேறு: உயிர் வேறு; மனம் வேறு; ஆயினும், அம்மூன்றையும் தனிப்படுத்தவும் இயலாது. ஒன்றின் இயக்கம், இன்னொன்றின் இயக்கத்தைப் பாதிக்கவே செய்கிறது. மன இயக்கத்தில் ஏற்படும் உணர்வுகளின் தாக்குதல்கள் உடலியக்கத்தையும், உயிரியக்கத்தையும் மிகவும் கடுமையாகத் தாக்குகிறது. அவ்வளவு கடுமையாக உடலியக்கத்தின் மாறுபாடுகள் மன இயக்கத்தைத் தாக்குவதில்லை. ஆனாலும், தாக்குதலும் பாதிப்பும் இல்லாமலே போகாது. ஆதலால், சிறந்த முறையில் வாழ விரும்பும் மனிதனுக்கு மனச் சுகாதாரமும் தேவை. உடல் சுகாதாரமும் தேவை. இந்த இரண்டு சுகாதாரமும் அமைய சுற்றுப்புறச் சூழ்நிலைச் சுகாதாரமும் இன்றியமையாதது. அதனாலேயே தனி மனிதனை ஆளும், மனத்தில் தொடங்கி, மனித சமுதாயத்தை ஆட்சி செய்து நெறிப்படுத்தும் அரசியல் நெறி வரையில் நெறி முறைகளையும், மரபுகளையும் உண்டாக்கினார்கள். நெறி, இன்பம் தருவது; இனிய மனத்திற்கு வித்தாக அமைவது.

நெறிவழி, இன்பம் நிறைந்த வாழ்விற்கும் களமாக அமைவது. துன்பம், கவலை, போட்டி, பகை, போராட்டம் - இவை இனிய பண்புகளாகா. இவை தனி மனிதனுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ ஒரு பொழுதும் நலம் பயப்பன அல்ல. ஆயினும் என்ன? எங்கும் இன்பத்திற்கு மாறான உணர்வுகளே நிலை பெற்றிருக்கின்றன! ஏன்? நெறியல்லா நெறி தன்னை நெறியாக நினைந்து வாழ்வதனாலேயாம். மன வேறுபாடுகளால் மனித உலகத்திற்கே கேடு சூழ்கின்றன. உடற்குறையைத் தாங்கினாலும் தாங்கலாம். மனக் குறையைத் தாங்கமுடியாது. ஓங்கி அடித்தலைவிட மனம் நோக நடப்பது கேடு பயப்பது. அதனாலன்றோ “நெருப்பினால் சுடுதலும் ஆறும்; மனம் நொந்து நோகச் சுடுதல் ஆறாது” என்று வள்ளுவம் கூறிற்று.

மனம் ஒரு வழிப்பட்டதல்ல. ஒருவனுடைய மனத்தில் தோன்றும் உணர்வுகள், அவன் வாழும் சமுதாயத்தின் கடந்த