பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

493


அடிமனத்தைப் பண்புகள் பற்றும். மேல் மனம் துய்ப்பிலேயே நாட்டம் கொள்ளும். அடிமனம் படைப்பாற்றலிலேயே நாட்டம் கொள்ளும். மேல்மனம் பகை நெறி பாராட்டும். அடிமனம் அருளார்ந்த பொறுத்தாற்றும் நெறி பாராட்டும். மேல்மனம் ஆரவாரங்களை நாடும்; புகழை நாடும். அடிமனம் புகழ்கேட்க நாணும். மேல்மனம் தற்சலுகை பேணும். அடிமனம் பிறர் நலம் பேணும். மேல் மனம் குறைகளை மறைக்கும். அடிமனம் குறைகளை மாற்றும். மேல்மனம் தன்னியல்பு அறியக் கூசும். அடி மனம் தன்னியல்பை ஆராய்ந்தறியும். மேல் மனம் விரிந்த உலகை நாடும். அடிமனம் ‘எல்லாமாய் அல்லதுமாய்’ இருக்கும் இறையை நாடும். மேல்மனம் சடங்குகளில் அமைதி கொள்ளும். அடிமனம் ஆரா அன்பில் அமைதி கொள்ளும். அடிமனத்தின் ஆற்றலுக்கு மேல்மனத்தை உட்படுத்தினால் மனிதன் கடவுள் ஆவான்; மண்ணகம் சொர்க்கம் ஆகும். மேல்மனம் அடிமனத்தை மூடிமறைக்குமானால் மனிதன் மிருகமாவான். மண்ணகம் நரகம் ஆகும். இஃது ஒரு முன்னுரை! ஆராய்க!

மனம் நேரிதாக இருக்கவேண்டும். அதையே தான் நேர்மையென்று கூறுகின்றோம். நேர்மை யென்பதன் தெளிவான பொருளாவது இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுக்கு நேர்கோடு என்று பெயர். அதுபோலவே உயிரறிவையும், இறையறிவையும் நேராக இணைப்பது நேர்மை. இறையருளையும், உயிரருளையும் இணைப்பது நேர்மை. ஓர் உயிரின் இன்ப உணர்வை இன்னோர் உயிரின் இன்ப உணர்வோடு இணைப்பது நேர்மை. இந்த இணைப்பு, வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு கட்டத்திலும் இருக்குமாயின் “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்ற அப்பர் அடிகளின் அருள்வாக்கு நனவாகும்.

மனத்தில் கோட்ட மிருத்தலாகாது. சாதாரண ஈருருளை வண்டியின் சக்கரங்களில் கோட்டமிருந்தாலே