பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேறாத விருப்பங்கள் அடிமனத்தில் பதிவாகி மனமுறிவைக் காலத்தால் தோற்றுவிக்கின்றது.

பொதுவாக மனிதன் தன்னல உணர்வுக்கும், பிறர்நலம் கருதும் உணர்வுக்குமிடையே போராடிக் கொண்டிருக்கிறான். இந்த வகையில் காதலும் அடங்கும். தன்னலம் காக்கும் மனப்போக்கு எதையும் கண்டு அஞ்சும் தனக்கொரு பாதுகாப்பான சூழ்நிலை இல்லையென்று, எண்ணி எண்ணி ஏங்கும். ஒரு மனிதனின் தடைப்பட்ட நசுக்குண்ட விருப்பம் மனத்தைவிட்டு அகலாமல் அதன் ஆழ்ந்த பகுதியில் பதுங்கிக் குறுக்கு வழிகளில் பயன்பெற விழைகிறது. இதுவே, மனநோயின் தொடக்கம். இயல்பூக்கங்கள் – பற்றுக்கள், பொதுவாக விருப்பங்கள் பல வேலைகளில் ஒன்றோடொன்று போராடுவதால் மன அமைதி கெடுகிறது; எரிச்சலும், சோர்வும் ஏற்படுகிறது. இங்ஙணம் தோன்றும் எரிச்சல், சோர்வு மனிதனின் செயலாற்றும் திறமையை இழக்கும்படிச் செய்கிறது.

மனநோயாகிய மன எரிச்சலுக்கு மூல நோய் மனக்கடுப்பாகும். ஒரு மனிதனின் தாழ்வுணர்ச்சி – எதிர்பாராமல் சந்தித்த தோல்வி – நம்பிக்கை ஏமாற்றங்கள் – தனது விருப்பம் நிறைவேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகள் ஆகியவைமீது மனக்கடுப்பு ஏற்படுகிறது. இந்த மனக்கடுப்பு மற்றவர்களிடம் வெறுப்பை வளர்க்கிறது; பகைமை பாராட்டச் செய்கிறது; நீங்காச் சின்னத்தைத் தோற்றுவிக்கிறது. எப்பொழுதும் ‘சிடு சிடு’ என்ற பேச்சு எதிர்த்தரப்பைக் கேட்காமலே பேசும் குணம் இவற்றை மனக்கடுப்பு உருவாக்குகிறது. மனக்கடுப்பு ஒரு தொத்து நோய். அது மறைந்து அழுந்திக் கிடக்கும் வெறுப்புணர்ச்சிகளை மற்றவர்களிடமும் தூண்டிவிடுகின்றது. தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் மாறாக நடந்து கொள்ளும் மனிதர்களைப் பார்த்தாலும் மன எரிச்சல் நோய் வருகிறது. நம்மோடு நெருங்கிப் பழகுகிறவர்களைப் பற்றி நாம்