பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறை பார்க்காமல் குணம் பார்த்துச் சீராட்டி வாழத் தொடங்கினால் வாழ்வு சிறக்கும். உலகம் செழிக்கும்.


வாழ்க்கையின் உறவுக் களங்களை நம்பிக்கையின்பாற்படுத்த வேண்டும். வாழ்க்கையில் தொடர்பும், உறவும் உடைபவர்களிடத்தில் மனம் விட்டுப் பேசிப் பழகுதல் வேண்டும். தவறுகளையும் துன்பங்களையும் அறவே மறந்து மனத்தினை அன்பினால் ஆற்றிக் கொள்ள வேண்டும். நாள்தோறும் மனத்தினை திருவருள் நினைப்பில் தோய்த்துத் தூய்மை செய்து கொண்டு வர வேண்டும். உலகத்திற் சிறந்தது அறம்; வாழ்க்கையிற் பின்பற்ற வேண்டியது அறம். வாழ்க்கையில் செய்ய வேண்டியது அறம். அஃது எந்த அறம்? வள்ளுவரே வகுத்துத் தந்துள்ளார். “மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்து அறன்” என்பது குறள். “அனைத்து அறன்” என்ப தாவது, அதுவே பல அறங்களுக்கும் வழியாகும். ஆதலால், மனநலம் காத்து வாழ்வோமாக.


69.[1] கலையும் வாழ்வும்

தொழிலாளர்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக ஒரு குலமாக வாழ்ந்து, கல்விச் செல்வத்தையும் பொருட்செல்வத்தையும் பெற்று, சிறப்புடன் திகழ்ந்து கவலையற்ற, நேர்மையும் செம்மையும் நிரம்பிய நிலையுடன், குடிகெடுக்கும் செயல்களைத் தள்ளித் திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து, யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழவேண்டும்.

கலைகள் கருத்தைக் கவர்வன: களிப்பைத் தருவன. கருத்தற்ற கலைப் படைப்புக்கள் கால வெள்ளத்தை எதிர்த்து நீந்தி சென்று வாழ இயலாதவை. கருத்து, கற்றறிந்தோர் உள்ளத்திலே, தேங்கிநின்று தேசிய உணர்ச்சிக்கும் சமுதாய


  1. முத்து மொழிகள்.