பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

499


உயர்வுக்கும் உதவக்கூடியது. காலத்தால் மூத்த நமது இனம் கருத்தில் நாட்டம் கொண்டதாலேதான் கருத்தரங்கங்களில் ஏறி நின்று ஏற்றம் பெற்றது; கருத்துவழிவாழ் வாழ்ந்து மகிழ்ந்தது; கருத்துக்களிலே நல்லனவும் தீயனவும் உண்டு. கருத்து என்ற பேரில் உண்டாகும் எல்லாமே வாழ்வுக்கு உகந்தனவாக இருந்ததில்லை. இருப்பதுமில்லை – இருக்கவும் முடியாது.


இயல் இசை நாடகம் போன்ற கலைகள் தமிழனைப் பொறுத்தமட்டில் மகிழ்வை ஊட்டியதோடு – வாழ்வையும் காட்டின. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற உண்மையைத் தமிழர்களின் கலைகள் எடுத்தியம்பின. இதனாலே கலைவழிக் கலாசாரம் முகிழ்த்து, அன்பும் அறனும் பண்பும் பணிவும் மலர்ந்தன. கருத்துவழிப்பட்ட வாழ்வு அரும்பி மலர்ந்து மணம்வீசக் கலைகள் பயன்பட வேண்டும். இசை நாடகம் போன்றவற்றை அழகுக் கலைகள் என்கிறோம். அழகுக் கலைகள் ஆழ்ந்தகன்ற நுண்ணறிவை ஆக்கவேண்டும். இறந்த காலத்தைப் பற்றிய அறிவையும் நிகழ்காலத்தை யொட்டிய கருத்தையும் வருங்காலத்தைப்பற்றிய திட்டத்தையும் தமிழ்க் கலைகள் எடுத்துச் சொல்லவேண்டும். கல்லூரிகளிலே கற்கும் சிறார்களின் நற்சிந்தனைக்கும் – நல்ல முன்னேற்றத்திற்கும் கல்லூரி விழாக்களில் இடம் பெறும் கலை நிகழ்ச்சிகள் உதவவேண்டும். பருவம் அறந்து பக்குவம் தெரிந்து கலை நிகழ்ச்சிகளின் மூலம் நற்கருத்துக்களைத் தூவி விடவேண்டும். இன்றைய நிலையிலே பள்ளிகளின் மூலமாகப் போதிக்கமுடியாத நற்கருத்துக்களை மாணவர்க்குக் கலைகளின் வழியே போதித்து விடலாம். இப்போது கலைகளை அனுபவித்துப் போற்றும் சூழ்நிலை இளைஞர்களிடத்திலே உருவாகியுள்ளது. இந்த நல்லநிலையைப் பயன்படுத்தி நயத்தக்க கருத்துக்களைக் கலைகள் மூலம் கற்பிக்க வேண்டும்.